/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
52 இந்திரா உணவகங்கள் பெங்களூரில் கட்டப்படுமா?
/
52 இந்திரா உணவகங்கள் பெங்களூரில் கட்டப்படுமா?
ADDED : பிப் 06, 2025 11:06 PM
பெங்களூரு: டெண்டர் எடுக்க யாரும் முன்வராததால், பெங்களூருக்கு புதிதாக அறிவிக்கப்பட்ட 52 இந்திரா உணவகங்கள் கட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகாவில் 2013 முதல் 2018 வரை காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது, ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்கும் வகையில், மாநிலம் முழுதும் இந்திரா உணவகங்கள் திறக்கப்பட்டன.
பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் இந்திரா உணவகங்களுக்கு கொடுத்து வந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. உணவகங்களை நிர்வகித்து வந்தவர்களுக்கு பில் தொகை பாக்கி வைக்கப்பட்டது. இதனால் உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், இந்திரா உணவகங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சி துவங்கப்பட்டது. அத்துடன் பெங்களூரில் புதிதாக 52 இந்திரா உணவகங்கள் கட்ட, கடந்த ஆண்டு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிய உணவகங்கள் கட்டுவதற்கு மாநகராட்சி டென்டர் கோரியது. ஆனால், யாரும் டெண்டரில் இதுவரை பங்கேற்க வரவில்லை. தற்போது நிலவும் குழப்பம் மற்றும் பில் தொகை நிலுவை காரணமாக டெண்டரில் பங்கேற்க யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 52 புதிய உணவகங்கள் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.