/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கட்டாய திருமணத்தை தடுத்த 16 வயது சிறுமி
/
கட்டாய திருமணத்தை தடுத்த 16 வயது சிறுமி
ADDED : ஆக 11, 2025 10:08 PM
சித்ரதுர்கா, : பள்ளியில் அதிகாரிகள் ஏற்படுத்திய விழிப்புணர்வால், 16 வயது சிறுமி, தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
சித்ரதுர்கா நகரில் வசிக்கும் 16 வயது சிறுமி, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கிறார். இவருக்கு பெற்றோர், திருமண ஏற்பாடுகள் செய்தனர்.
மனைவியை இழந்த நபருக்கு, சிறுமியை திருமணம் செய்து கொடுக்க, பெற்றோர் முடிவு செய்தனர். வரும் 17ம் தேதி முகூர்த்தம் குறிக்கப்பட்டது.
சிறுமி எட்டாம் வகுப்பு படித்தபோது, பள்ளிக்கு வந்த போலீஸ் அதிகாரிகள், குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிறு வயதில் திருமணம் செய்தால், மன நிலை, உடல் நிலையில் ஏற்படும் பாதிப்புகள், வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய தொந்தரவு குறித்து விவரித்தனர். இது சிறுமியின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
எனவே, தனக்கு இப்போதே திருமணம் வேண்டாம் என, சிறுமி பிடிவாதம் பிடித்தார். ஆனால், பெற்றோரும், அண்ணனும் பலவந்தமாக திருமணம் செய்ய முயற்சித்தனர்.
இதனால் மனம் வருந்திய சிறுமி, நேற்று முன்தினம் சித்ரதுர்கா நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் செய்தார்.
உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், சிறுமியின் பெற்றோரை வரவழைத்து, திருமணத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.
சிறுமியை பெற்றோருடன் அனுப்பாமல், சித்ரதுர்காவில் உள்ள அரசு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.