ADDED : ஏப் 30, 2026 12:09 AM

பெங்களூரு: ஷிவமொக்காவில் வனப்பகுதிக்குள் சூதாட்டம் ஆடுவதை ட்ரோன் மூலம் கண்டுபிடித்த போலீசார், 19 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஷிவமொக்காவில் நாளுக் கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த, ட்ரோன்களை பயன்படுத்தி, போலீசார் கண்காணித்து வந்தனர். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. போதை பொருள் பயன்பாடும், சூதாட்டமும் குறைந்தது.
போலீசாரின் நடவடிக்கையால் திக்குமுக்காடிய சூதாட்ட பேர்வழிகள், நகரில் சூதாட்டம் நடத்தினால் பிடிக்கின்றனர் என்பதற்காக, வனப்பகுதிக்குள் சூதாட்டம் ஆட துவங்கி உள் ளனர்.
இது குறித்து பொது மக்களிடம் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரும் வனப்பகுதிக்குள் சென்று ட்ரோன் மூலம் கண்காணித்தனர். அப்போது, இரண்டு மூன்று இடங்களில் 50க்கும் மேற்பட்டோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
ட்ரோன் பறப்பதை கவனித்த சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இவர்களை பிடிப்பதற்காகவே, வனப்பகுதி வெளியே இருந்த போலீசார், 19 பேரை கைது செய்தனர். பத்ராவதி கிராமப்புற போலீசார் விசாரிக்கின்றனர்.
