தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 2 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது தி.மு.க.,?

 2 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது தி.மு.க.,?

 2 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது தி.மு.க.,?


ADDED : செப் 09, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, புறக்கணிப்பதா என, தி.மு.க., குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

வரும் அக்., 6ல் நடக்கும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், இன்று தொடங்க உள்ளது.

ஆலோசனை இந்நிலையில், இடைத்தேர்தலை அணுகுவது குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்துள்ளது.

இதுகுறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம், தாராபுரத்தில், அ.தி.மு.க., பலமாக உள்ளது. 2021 சட்டசபை தேர்தலில், சென்னை மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற்றபோதும், மதுராந்தகத்தில் தோற்றது.

அதேபோல், தாராபுரத்தில் வெறும் 1,700 ஓட்டு வித்தியாசத்தில் தான் தி.மு.க., வென்றது. 2026 சட்டசபை தேர்தலிலும், மதுராந்தகத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., தாராபுரத்தையும் கைப்பற்றியது. எனவே, இவ்விரு தொகுதிகளிலும் தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு குறைவுதான். பதவியை ராஜினாமா செய்தோருக்கே, த.வெ.க., மீண்டும் 'சீட்' கொடுத்தால் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட கூடும்.

இந்நிலையில், தி.மு.க.,வும் களமிறங்கினால், மும்முனை போட்டி உருவாகி, த.வெ.க.,வுக்கே சாதகமாகும். இடைத்தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைந்தால், அக்கட்சியின் உள்ளாட்சி தேர்தல் கணக்குகளில், பலத்த அடி விழும்.

உடைக்கலாம் எனவே, இடைத் தேர்தலில் தி.மு.க., போட்டியிடாமல் விலகி, அ.தி.மு.க., வெற்றி பெற திரைமறைவில் உதவினால், த.வெ.க.,வை இரு தொகுதிகளிலும் வீழ்த்தி, விஜயின் பிம்பத்தை உடைக்கலாம். அதே நேரத்தில், தேர்தல் களத்தை தவிர்த்தால், த.வெ.க.,வுக்கு பயந்து பின்வாங்கியதாகவும் ஆகி விடும்.

இப்படி பலவிதமாக எழும் கேள்விகள் தலைமையை சுழன்றடிக்கின்றன. இறுதி முடிவுக்கான ஆலோசனைகள் தொடர்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே, சென்னை அறிவாலயத்தில் பேட்டியளித்த ஸ்டாலின், ''சட்டசபை மாண்போடு நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க., நிலைப்பாடு குறித்து, விரைவில் அறிவிப்போம்,'' என்றார்.

த.வெ.க., நிர்வாகிகள் ஆர்வம்

த.வெ.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது : அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்த மதுராந்தகம் மரகதம் குமரவேலுக்கு துணை பொதுச்செயலர் பதவியும், அவரது கணவர் குமரவேலுக்கு மாவட்ட செயலர் பதவியும் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், தாராபுரம் சத்யபாமாவுக்கும் மாவட்ட செயலர் பதவி கிடைத்து விட்டது. இந்த பதவிகளுக்காக, ஏற்கனவே விஜய் ரசிகர் மன்றத்தில் உழைத்த பலரும் காத்திருந்தனர். எனவே, இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை, சொந்த கட்சியினருக்கே முதல்வர் விஜய் வழங்க வேண்டும். குறிப்பாக, கட்சி தாவி வந்தவர்களுக்கே 'சீட்' கொடுத்தால், வெற்றி பறிபோகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



பா.ம.க.,வுடன் பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: மதுராந்தகத்தில் தொடர்ந்து இரு முறை அ.தி.மு.க., வெற்றி பெற, பா.ம.க., கூட்டணியே காரணம். எனவே, இடைத்தேர்தலுக்காக பா.ம.க.,வுடன் பழனிசாமி பேச்சு நடத்துகிறார். அதேபோல், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் ஆட்சி அதிகாரம் மற்றும் விஜய் அலையை மீறி தாராபுரத்தில் அ.தி.மு.க., வென்றது. த.வெ.க., மூன்றாம் இடம் தான் பிடித்தது. எனவே, இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற, அனைத்து செலவுகளையும் தானே ஏற்க பழனிசாமி தயாராகி விட்டார். இடைத்தேர்தலை தி.மு.க., புறக்கணித்தால், இரு தொகுதிகளையும் வெல்லலாம் என அவர் நினைக்கிறார்; அதற்கும் திரைமறைவில் பேச்சு நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us