ADDED : மே 11, 2026 11:15 PM
நாராயணபுரா: கூலி தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட்டில், எதிர்பாராமல் தீப்பிடித்ததில் இரண்டு குழந்தைகள் கருகி உயிரிழந்தன.
கர்நாடகா வேறு மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினர், பிழைப்பு தேடி பெங்களூரு வந்தனர். கூலி வேலை செய்து வந்த இவர்கள், கொத்தனுாரின் நாராயணபுராவில், 'ஷெட்' போட்டு வசிக்கின்றனர்.
நேற்று காலை பெற்றோர், தங்களின் மகன் அர்ஜுன், 5, மகள் ஆஷா, 3, ஆகியோரை பாட்டியிடம் விட்டு பணிக்கு சென்றிருந்தனர்.
மதிய நேரத்தில் அந்த பாட்டி, குழந்தைகளை ஷெட்டிலேயே விட்டு, வெளியே சென்றிருந்தார். அப்போது எதிர்பாராமல் ஷெட்டில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில், ஷெட் முழுவதும் தீ பரவியதால், குழந்தைகளால் வெளியே வர முடியவில்லை. தீயில் சிக்கி கொண்டனர்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அப்பகுதியினர் தீயை கட்டுப்படுத்துவதற்குள், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த ன. தகவலறிந்து அங்கு வந்த கொத்தனுார் போலீசார், குழந்தைகளின் உடல்களை மீட்டு, பணிக்கு சென்றிருந்த பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
ஷெட்டில் தீப்பிடிக்க என்ன காரணம் என்பது தெரியவில்லை.
