/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் கனமழை மண் சரிந்து 2 தொழிலாளி பலி
/
பெங்களூரில் கனமழை மண் சரிந்து 2 தொழிலாளி பலி
ADDED : செப் 03, 2025 05:05 AM
எலஹங்கா : பெங்களூரில் கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும்போது, மண் சரிந்ததில், ஆந்திராவை சேர்ந்த இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பெங்களூரு, எலஹங்காவில், 'எம்பசி குழுமம்' கட்டட வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்காக, கடந்த சில நாட்களாக அஸ்திவாரம் தோண்டப்பட்டு வருகிறது. இப்பணியில் ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கன மழை பெய்தது. அஸ்திவார பள்ளத்திற்குள் மழைநீர் தேங்கியது.
இதை கவனித்த தொழிலாளர்கள், அங்கிருந்து மேலே வர முயற்சித்தனர். அதற்குள் திடீரென மண் சரிந்து விழுந்தது.
இதில், சிவா, 32, மதுசூதன் ரெட்டி, 58, ஆகியோர் மீது மண் சரிந்து விழுந்தது. அவர்கள் புதையுண்டனர். அவர்களை மற்ற தொழிலாளர்கள் மீட்க முயற்சித்தனர். எலஹங்கா போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த அவர்கள், மண்ணில் சிக்கிய சிவாவை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மதுசூதன் ரெட்டி, வழியிலேயே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவா, நேற்று காலை உயிரிழந்தார்.
எலஹங்கா போலீசார் விசாரிக்கின்றனர்.