/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2,041 ஏக்கர் வன நிலங்கள் ஆக்கிரமிப்பு
/
2,041 ஏக்கர் வன நிலங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூன் 20, 2025 11:07 PM

பெங்களூரு: ''பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் மட்டும் 2,041 ஏக்கருக்கும் அதிகமான வன நிலங்கள் ஆக்கரமிக்கப்பட்டுள்ளன. 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 128 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன,'' என வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.
பெங்களூரு கன்டோன்மென்ட் அருகிலுள்ள சாலை ஓரங்களில் நேற்று மரங்களை சுற்றி உள்ள கான்கிரீட்டை அகற்றும் பணியை வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மரக்கிளை விழுந்து 29 வயது இளைஞர் அக் ஷய் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. சரியாக வேரூன்றாத மரங்கள், மழை மற்றும் காற்றால் பாதிக்கப்படும்.
மரத்தின் வேருக்கு நீர் செல்லாத வகையில் உள்ள கான்கிரீட், கல் பலகைகள், ஓடுகளே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
மரங்களை சுற்றி உள்ள கான்கிரீட்டை அகற்றும்படி கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் ராமேஸ்வர்ராவ் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.
இனி சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும்போது, ஒரு மீட்டர் சுற்றளவில் மண் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாநிலத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், நெடுஞ்சாலை ஆணையம், தோட்டக்கலை துறை, வனத்துறையின் சமூக வனப் பிரிவும், தாங்கள் ஏற்கனவே நட்ட மரங்களை சுற்றி உள்ள கான்கிரீட், தார் சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடு, வர்த்தக கட்டடங்களின் முன் உள்ள மரங்கள், வீட்டையும், கடையின் பெயரை மரப்பதாக கூறி, வெட்டும் போக்கு அதிகரித்து வருகிறது.
வீட்டின் முன் செடிகளை சுற்றி கான்கிரீட் போட வேண்டாம்; சட்ட விரோதமாக மரங்களை வெட்ட வேண்டாம்.
பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் மட்டும் 2,041 ஏக்கருக்கும் அதிகமான வன நிலங்கள் ஆக்கரமிக்கப்பட்டுள்ளன. 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 128 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

