225 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் பெங்களூரில் நாச வேலைக்கு சதியா?
225 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் பெங்களூரில் நாச வேலைக்கு சதியா?
ADDED : ஜூன் 10, 2026 03:16 AM

ஆவலஹள்ளி: பெங்களூரில் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 225 ஜெலட்டின் குச்சிகள், 55 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாச வேலையில் ஈடுபட சதி நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.
பெங்களூரு காட அக்ரஹாராவில், தோட்டத்து வீட்டில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, ஆவலஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்படி, தோட்டத்து வீட்டில் நேற்று காலை போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இணைந்து சோதனை நடத்தினர். அங்கிருந்த பெட்டியை எடுத்து பிரித்தனர்.
அதில் இருந்த, 225 ஜெலட்டின் குச்சிகள், 55 டெட்டனேட்டர்களை வெளியே எடுத்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
தோட்ட உரிமையாளர் வெங்கடராம ரெட்டியிடம் விசாரித்த போது, கல்குவாரிகளில் பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதற்காக, ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை வைத்திருந்ததாக கூறினார்.
ஆனால், அவற்றை பயன்படுத்துவதற்கான ஆவணங்கள், எங்கிருந்து வாங்கியது என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை.
உண்மையிலேயே கல்குவாரிக்கு தான் வாங்கினரா; அல்லது நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டப்பட்டு இருந்ததா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, மே 10ம் தேதி பெங்களூரு வந்தார். கனகபுரா சாலை வழியாக காரில் சென்றார். அந்த சாலையில் தத்தகுனி என்ற இடத்தில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து மத்திய விசாரணை அமைப்புகள், பெங்களூரு போலீசார் விசாரிக்கின்றனர். இதுவரை அந்த வழக்கில் துப்பு கிடைக்காத நிலையில், ஆவலஹள்ளி பகுதியில் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
