/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காவி துண்டு அணிந்தவரை தாக்கிய 3 பேர் கைது
/
காவி துண்டு அணிந்தவரை தாக்கிய 3 பேர் கைது
ADDED : ஆக 27, 2025 07:18 AM

கலாசிபாளையம் : தலையில் காவி துண்டு அணிந்து பணியாற்றியவரை தாக்கிய மூன்று முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, கலாசிபாளையாவில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் சுரேந்திர குமார். கடந்த 24ம் தேதி இரவு 9:30 மணியளவில், தலையில் காவி நிற துண்டை கட்டிக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மூன்று முஸ்லிம்கள், பணி செய்து கொண்டிருந்த சுரேந்திர குமாரை தடுத்து, ஆபாச வார்த்தைகளால் திட்டி, 'எதற்காக காவி நிற துண்டை அணிந்துள்ளாய்?' என்று கேட்டனர்.
இதை பார்த்த நிறுவன உரிமையாளர் ஹரிகிருஷ்ணா, அங்கு வந்து அவர்களை சமாதானப் படுத்த முயன்றார். அதில் ஒருவர், ஹரிகிருஷ்ணாவையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவர் சட்டையையும் கிழித்து, தாக்கினார். பின், 'உன்னிடம் பணியாற்றுபவன் எதற்காக காவி நிற துண்டை அணிந்துள்ளான்? அதை கழற்றச் சொல்' என்று கத்தினர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் கலாசிபாளையா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார், என்.சி.ஆர்., எனும் அறிய முடியாத குற்றப்பதிவாக பதிவு செய்தனர். இதையறிந்த ஹிந்து அமைப்பினர், பஜ்ரங்தள் அமைப்பினர் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, முறைப்படி வழக்குப் பதிவு செய்யும்படி வலியுறுத்தினர்.
அதன் பின்னரே, கைது செய்யும் வழக்கில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர், அசிஸ் கான், 37, இம்ரான் கான், 35, தபரேஸ், 30, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து புகார் அளித்த ஹரிகிருஷ்ணா கூறியதாவது:
எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர், தலையில் காவி நிற துண்டை அணிந்திருந்தார். தலையில் இருந்து வடியும் வியர்வையை துடைக்கவே கட்டியிருந்தார். அங்கு வந்த மூன்று பேர், எதற்காக காவி துண்டு அணிந்துள்ளாய் என்று கேட்டனர். உடனடியாக அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தேன். திடீரென என்னை தாக்கினர்.
இங்கு பல ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் அனைவரும் ஒன்றாக பழகி வருகிறோம். என்னை தாக்கியவர்கள் வேறு பகுதியை சேர்ந்தவர்கள்.
இதற்கு முன்பு அவர்களை இங்கு பார்த்ததில்லை. தற்போது பலரும் எங்களுக்கு ஆதரவாக நிற்பதால், போலீசில் புகார் அளித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.