மேல்சபை தேர்தலில் வென்ற 4 எம்.எல்.சி.,க்கள் பதவியேற்பு
மேல்சபை தேர்தலில் வென்ற 4 எம்.எல்.சி.,க்கள் பதவியேற்பு
UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 07:46 PM

பெங்களூரு: மேல்சபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.,வின் கே.எம்.சுரேஷ், எஸ்.வி.சங்கனுார், சஷில் நமோஷி, ம.ஜ.த.,வின் ஏ.பி.ரங்கநாத் ஆகிய நால்வரும் எம்.எல்.சி.,க்களாக நேற்று பதவியேற்றனர்.
கர்நாடக மேல்சபையின் மேற்கு பட்டதாரி தொகுதி, தென்கிழக்கு பட்டதாரி தொகுதி, வடகிழக்கு ஆசிரியர் தொகுதி, பெங்களூரு ஆசிரியர் தொகுதி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ம் தேதி ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், நான்கு இடங்களிலும் பா.ஜ., – ம.ஜ.த., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு, பெங்களூரு விகாஸ் சவுதாவில் நேற்று பதவியேற்பு விழா நடந்தது. இதில், மேல்சபை தலைவர் சலீம் அகமது, துணை தலைவர் உமாஸ்ரீ, துணை முதல்வர் பரமேஸ்வர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பா.ஜ.,வின் கே.எம்.சுரேஷ், எஸ்.வி.சங்கனுார், சஷில் நமோஷி, ம.ஜ.த.,வின் ஏ.பி.ரங்கநாத் ஆகிய நால்வரும் எம்.எல்.சி.,யாக பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு மேல்சபை தலைவர் சலீம் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிதாக பதவியேற்றவர்களுக்கு துணை முதல்வர் பரமேஸ்வர் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘புதிய உறுப்பினர்கள் அவையின் மாண்பை காப்பாற்ற வேண்டும். மாநிலத்தின் கல்வி, சமூக வளர்ச்சிக்காக அயராமல் உழைக்க வேண்டும். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் செயல்பட வேண்டும்,’’ என்றார்.
