/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தமிழகத்துக்கு காவிரியில் 42,000 கனஅடி நீர் திறப்பு ஹாசனில் வீடு இடிந்து மூதாட்டி பலி
/
தமிழகத்துக்கு காவிரியில் 42,000 கனஅடி நீர் திறப்பு ஹாசனில் வீடு இடிந்து மூதாட்டி பலி
தமிழகத்துக்கு காவிரியில் 42,000 கனஅடி நீர் திறப்பு ஹாசனில் வீடு இடிந்து மூதாட்டி பலி
தமிழகத்துக்கு காவிரியில் 42,000 கனஅடி நீர் திறப்பு ஹாசனில் வீடு இடிந்து மூதாட்டி பலி
ADDED : அக் 25, 2025 05:21 AM

பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால், காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு வினாடிக்கு 42,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஹாசனில் வீடு இடிந்து மூதாட்டி உயிரிழந்தார்.
கர்நாடகாவின் மலைநாடு, கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால், கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இரு அணைகளில் இருந்து, நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி, தமிழகத்திற்கு 42,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
ஹாசன் அரகலகூடு தாலுகாவில் உள்ள, பல கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முழுதும் மழை கொட்டித் தீர்த்தது, மத்திகோடு என்ற கிராமத்தில் வீடு இடிந்து ஜவரம்மா, 62, என்ற மூதாட்டி உயிரிழந்தார்.
மைசூரு அரண்மனை வளாகத்தின் முன், நேற்று மாலை ராட்சத மரம் சாய்ந்ததில், இரண்டு ஆட்டோக்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. ஆட்டோவில் இருந்து சிறிது துாரத்தில் நின்றதால், டிரைவர்கள் இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சித்ரதுர்காவில் கனமழையால், வாணி விலாஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. கொப்பால், யாத்கிர் மாவட்டங்களில் விளைநிலங்களுக்குள், தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்தன. கடலோர மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதால், கடலுக்குள் சென்ற மீனவர்கள் திரும்ப வந்தனர்.
நேற்று காலை 8:30 மணி முதல் இரவு 8:30 மணி நிலவரப்படி கொப்பால் குகனுாரில் 6.60 செ.மீ., மழை பதிவானது. ராய்ச்சூர் பிஜங்கெரேவில் 6.30 செ.மீ., கொப்பால் பானாபுராவில் 5.30 செ.மீ., ராய்ச்சூர் ஜம்பலதின்னியில் 4.75 செ.மீ., உத்தர கன்னடா கிளிகனுாரில் 4.65 செ.மீ., மழை பதிவாகி இருந்தது.
பாகல்கோட், பெலகாவி, பீதர், தார்வாட், கதக், கலபுரகி, கொப்பால், ராய்ச்சூர், விஜயபுரா, யாத்கிர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், பெங்களூரு, மைசூரு, குடகு, மாண்டியா, ராம்நகரில் மிதமான மழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

