/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
500 குவின்டால் ரேஷன் அரிசி தனியார் குடோனில் பறிமுதல்
/
500 குவின்டால் ரேஷன் அரிசி தனியார் குடோனில் பறிமுதல்
500 குவின்டால் ரேஷன் அரிசி தனியார் குடோனில் பறிமுதல்
500 குவின்டால் ரேஷன் அரிசி தனியார் குடோனில் பறிமுதல்
ADDED : மே 01, 2025 05:30 AM

மங்களூரு: தனியார் குடோன் ஒன்றில், நுாற்றுக்கணக்கான மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டதை, உணவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அன்னபாக்யா திட்டத்தின் அரிசியை பாலீஷ் செய்து, வெளி மாநிலங்களுக்கு விற்கப்படுவதாக, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஏழை குடும்பத்தினர், பட்டினி கிடக்க கூடாது. மூன்று வேளை உணவருந்த வேண்டும் என்ற, நல்ல நோக்கத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, 'அன்னபாக்யா' திட்டத்தை செயல்படுத்தியது. திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்குவதாக அறிவித்தது.
அரிசி பற்றாக்குறை ஏற்பட்டதால், ௫ கிலோ அரிசியும், ௫ கிலோ அரிசிக்கான பணமும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு சார்பில் தலா ௫ கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசி தவறாக பயன்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நியாய விலை கடைகாரர்கள் பலர், பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய அரிசியை, அரிசி மில்களுக்கு விற்கின்றனர். இங்கு அரிசியை பாலீஷ் செய்து, அதிக விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரு நகரின் துறைமுகம் அருகில் உள்ள தனியார் குடோனில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக, தகவல் வெளியானது. இதை தீவிரமாக கருதிய தட்சிணகன்னடா கலெக்டர் முல்லை முகிலன், குடோனில் சோதனை நடத்தும்படி உத்தரவிட்டார்.
இதன்படி உணவுத்துறை உதவி கமிஷனர் ஹர்ஷ வர்தன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று காலை குடோனுக்கு சென்று, திடீர் சோதனை நடத்தினர். அங்கு நுாற்றுக்கணக்கான மூட்டைகளில், ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர். குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
ஹாவேரி உட்பட, வட மாவட்டங்களின் அன்னபாக்யா அரிசியை, வெளி மாநிலங்களில் விற்பனை செய்யும் மாபியா செயல்படுவதாக சந்தேக்கிறோம். இடைத்தரகர்கள் மூலம், ரேஷன் அரிசியை வாங்கி மங்களூரின் சில தனியார் அரிசி மில்களுக்கு, விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரிசி மில்களில் ரேஷன் அரிசியை, பிராண்ட் அரிசியாக மாற்றி வேறு பிராண்ட்களின் பெயர்களில், வெளி மார்க்கெட்டுக்கு சப்ளை செய்திருக்க வாய்ப்புள்ளது.
குடோனில் 500 குவின்டாலுக்கும் அதிகமான அரிசியை சேமித்து வைத்திருப்பதை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தோம். அரிசி எங்கிருந்து வந்தது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என, குடோன் உரிமையாளர்களிடம், விசாரணை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.