ADDED : அக் 25, 2025 05:23 AM

பெங்களூரு: கர்னுால் விபத்தில் பெங்களூரில் வசித்த இரு குழந்தைகள் உட்பட ஆறு பேரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தீப்பிடித்து ஆம்னி பஸ் எரிந்ததில் ஆந்திராவின் நெல்லுார் விஞ்சாமுரு மண்டலம் கொல்லாவாரிப்பள்ளியை சேர்ந்த கொல்லா ரமேஷ், 35, அவரது மனைவி அனுஷா, 30, மகன் மனிஷ், 12, மகள் மன்விதா, 10, ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தனர். இவர்கள் பெங்களூரில் வசித்து வந்தனர்.
இதுபோல பெங்களூரின் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஹைதராபாதின் அனுஷா, 22, கன்னமனேனி தாத்ரி, 23, ஆகியோரும் உடல்கருகி இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதற்காக கர்நாடக போக்குவரத்து அதிகாரிகள் இருவரை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, கர்னுால் அனுப்பி வைத்துள்ளார்.
விபத்து குறித்து பெங்களூரில் நேற்று துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
ஆந்திராவின் கர்னுாலில் நடந்த விபத்து துரதிருஷ்டவசமானது. சில தினங்களுக்கு முன்பு, பெங்களூரில் இருந்து ஐதராபாத் சென்ற ஒரு தனியார் பஸ்சும், ராய்ச்சூர் பகுதியில் தீப்பிடித்தது. தீப்பிடித்ததை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை ஓட்டினார். காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியதால், பஸ் நிறுத்தப்பட்டது; 20 பேர் மீட்கப்பட்டனர்.
தற்போது துயரம் நடந்துள்ளது. தனியார் பஸ்கள் விஷயத்தில் அனைத்து மாநில அரசுகளும் கவனம் செலுத்த வேண்டும். கர்னுால் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தும்படி, ஆந்திர அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். இது ஒரு சிறிய சம்பவம் அல்ல. இதுபோன்ற பெரும் துயரம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

