ADDED : ஜூன் 19, 2026 10:30 PM
துமகூரு: சட்ட விரோதமான ஆதரவற்றோர் இல்லத்தில், சரியான பராமரிப்பின்றி அவதிப்பட்ட, 64 பேரை, அதிகாரிகள் மீட்டனர்.
துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவின், கானதஹுனசே கிராமத்தில், சட்ட விரோதமாக, ஆதரவற்றோர் இல்லம் இயங்கி வருகிறது. இங்குள்ள ஆதரவற்றோருக்கு சரியான பாதுகாப்பு இல்லை. அடைக்கலம் தருவதாக கூறி, அழைத்து வந்து சித்ரவதை செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இதை கவனித்த மகளிர் சங்கங்கள், உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, புகார் அளித்தன. இதையடுத்து போலீஸ் அதிகாரிகள், தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன் தினம் நள்ளிரவு, அந்த இல்லத்திற்கு திடீரென வந்து சோதனை நடத்தினர்.
முறைப்படி எந்த அனுமதியும் பெறாமல், ஆதரவற்றோர் இல்லம் நடந்து வருவதை கண்டுபிடித்தனர். அங்கிருந்த ஆதரவற்ற மக்கள் சரியான உணவு, குடிநீர் இல்லாமல், மோசமான நிலையில் இருந்தனர். குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லை.
இதை கண்டு, அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்த இல்லத்தில் இருந்த, 64 பேரை, உடனடியாக அரசு ஆதரவற்றோர் மையத்துக்கு மாற்றினர். அங்கு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டன.
சட்ட விரோதமாக ஆதரவற்றோர் இல்லம் நடத்திய கீதா என்பவர் மீது, நேற்று மதியம் சிரா போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
