ADDED : செப் 22, 2026 08:57 PM

ஆனேக்கல்: துப்பாக்கி வைத்திருந்த, இரண்டு ரவுடிகள் உட்பட, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடக்கிறது.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல் போலீசார், கடந்த மாதம் 14 ம் தேதி ரோந்து சென்ற போது, சந்தேகம்படும்படி சுற்றிய ஒருவரை பிடித்தனர். அவர் கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்த போது, அதில் மூன்று துப்பாக்கிகள், பத்து தோட்டாக்கள் இருந்தன. அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் மஹாராஷ்ராவை சேர்ந்த பிரதீப் ரமேஷ் என்பது தெரிந்தது.
விசாரணையில், மஹாராஷ்டிராவின் தாவுத் என்பவர், பிரதீப் ரமேஷிடம் 5 துப்பாக்கிகளை கொடுத்து அனுப்பியது தெரிந்தது. இதில் இரண்டு துப்பாக்கிகளை, பிரபல ரவுடிகள் ரிஸ்வான் பாஷா என்ற குல்லா ரிஸ்வான், மனு என்ற ஜாக்கி ஆகியோரிடம் விற்றதும் தெரிந்தது.
தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடிய நிலையில், நேற்று முன்தினம் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் ரவுடிகள் நஞ்சப்பா, வெங்கடராஜு, சிவராஜ், கோபி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது கோகா எனும் கர்நாடக ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கட்டுப்பாடு சட்டத்தில், ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையின் போது தங்களுக்கு, ரியல் எஸ்டேட் அதிபர்கள், அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளனர். இவர்கள் கூறியது உண்மையா என்று விசாரணை நடக்கிறது.
