/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
7ம் வகுப்பு மாணவர் துாக்கிட்டு தற்கொலை
/
7ம் வகுப்பு மாணவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஆக 05, 2025 07:03 AM
பெங்களூரு : பெங்களூரு, பனசங்கரியின், பனகிரி நகரில் வசிப்பவர் கணேஷ் பிரசாத், 38; இசைக்கலைஞர். இவரது மனைவி சவிதா, 35; கிராமிய பாடகி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகன் கந்தார், 14, தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
சவிதா கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். தந்தையும், பிள்ளைகளும் வீட்டில் இருந்தனர். நேற்று முன் தினம் இரவு, கந்தார், வழக்கம் போன்று உணவை முடித்துக் கொண்டு, தன் அறைக்கு சென்றார்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும், மகன் கதவை திறக்காததால் கணேஷ் பிரசாத், அறைக்கதவை தட்டினார். அப்போதும் கதவு திறக்கப்படவில்லை. குரல் கொடுக்கவும் இல்லை.
இதனால் கலக்கமடைந்த தந்தை, கதவை தள்ளி திறந்து பார்த்தபோது, கிடாரை தொங்க விடும் ஆணியில், துப்பட்டாவால் துாக்கிட்டு கந்தார் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இதை கண்டு அதிர்ச்சியில் தந்தை அலறினார். அப்போது அக்கம், பக்கத்தினர் உதவிக்கு வந்தனர். சி.கே.அச்சுகட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், கந்தாரின் உடலை மீட்டனர்.
தற்கொலைக்கு முன்பு, சிறுவன் எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்தது. அதில் அவர், 'இந்த கடிதத்தை படிக்கும் யாரும், அழாதீர்கள். தற்போது நான் சொர்க்கத்தில் இருக்கிறேன். என்னை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். என் முடிவு உங்களுக்கு வருத்தம் அளிக்கும் என்பது, எனக்கும் புரியும்.
இந்த வீடு நன்றாக இருக்க வேண்டும் என்பதால், நான் இந்த முடிவுக்கு வந்தேன். என் மீது யாருக்காவது கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள்' என கூறியிருந்தார்.
சிறுவனின் முடிவுக்கு, என்ன காரணம் என்பது தெரியவில்லை. இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.