/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
800 ஆண்டுகள் பழமையான திப்பேருத்ரசாமி கோவில்
/
800 ஆண்டுகள் பழமையான திப்பேருத்ரசாமி கோவில்
ADDED : செப் 01, 2025 10:10 PM

சித்ரதுர்கா மாவட்டம், நாயகனஹட்டியில் உள்ளது ஸ்ரீ குரு திப்பேருத்ரசாமி கோவில். இந்த கோவில், 800 ஆண்டுகள் பழமையானது. சிவ பக்தர்களில் ஒருவரான திப்பேருத்ரசாமி என்ற திப்பேசாமிக்காக கட்டப்பட்டு உள்ளது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவிலுக்கு பல சிறப்புகள் உள்ளன.
திருப்பேருத்ரசாமி, சைவ சமயத்தை பரப்புவதற்காக சிவபெருமானால் அனுப்பப்பட்ட ஐந்து கணதீஸ்வரர்களில் ஒருவர். இவர் சைவ சமயத்தை பரப்புவதற்காக பல இன்னல்களை சந்தித்து உள்ளார். சைவ சமயத்தை பரப்புவதற்காக பயணம் செய்யும் போது, சித்ரதுர்காவில் உள்ள நாயகனஹட்டிக்கு வந்தார். அப்போது, இவர் திப்பே எனப்படும் குப்பை மேட்டில் தியானம் செய்தார்.
சைவ சமயத்தை பரப்புவதற்காக திப்பேருத்ரசாமி வந்தாலும் மற்ற சமய, மதத்தினரை வெறுக்கவில்லை. இதனால், இவர் முஸ்லிம்களாலும் போற்றப்பட்டார். இவர், தன் கையால் ஒரு சிவலிங்கத்தை நிறுவி, அங்கு பூஜைகள் செய்ய துவங்கினார். அவர் பூஜை செய்த பகுதியே பிற்காலத்தில், கோவிலாக கட்டப்பட்டு உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மஹா ரத உற்சவத்துக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இது சித்ரதுர்கா மாவட்டத்தில் நடக்கும் பெரிய அளவிலான தேர் திருவிழாக்களில் ஒன்றாகும். இங்கு வரும் பக்தர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
கோவிலில் தினமும் ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகின்றன. கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும். தினமும் அன்னதானம் காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை வழங்கப்படும்.
- நமது நிருபர் -