ADDED : ஜூலை 04, 2025 05:21 AM
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களில் உள்ள பயணியர் ஓய்வறைகளின் தரம், அங்கு வழங்கப்படும் உணவு, பானம் ஆகியவற்றுக்கு சர்வதேச அளவில் பத்து விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் தலைமை வணிக அதிகாரி கென்னத் குல்ட்ப்ஜெர்க் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களை தடுக்க புனித் ராஜ்குமார் இதய ஜோதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 7.49 லட்சம் பேருக்கு இ.சி.ஜி., பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 7,239 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாசனில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதன் விளைவாக பெங்களூரில் உள்ள மருத்துவமனைகளில் இதய பரிசோதனை செய்வோர் எண்ணிக்கை, கடந்த ஒரு வாரமாக 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும், பரிசோதனைக்கு வருபவர்களில் இளம்வயதினரே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்ராஜ் நகர், மலை மஹாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தில் ராம்புரா பகுதியில் உள்ள ஹுனாசே பைலு வனப்பகுதியில் நேற்று முன்தினம் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள் கண்டறிந்தனர். யானை இறப்பு இயற்கையானதே. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மையான காரணம் தெரியும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் கண் பார்வை தொடர்பான பிரச்னைகளை தீர்க்க ஆஷா கிரணா திட்டம் செயல்படுகிறது. இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதாகவும், கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ததாகவும் கூறி உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி டாக்டர் ரோடெரிகோ ஹெச்.அப்ரின், சுகாதார, குடும்ப நலத்துறை செயலர் ஹர்ஷ் குப்தாவுக்கு பாராட்டு கடிதம் எழுதி உள்ளார்.
தாவணகெரே, சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சசி குமார், 25. இவர், ஆன்லைன் விளையாட்டில் 18 லட்சம் ரூபாய் பணத்தை பறிகொடுத்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யுமாறு பிரதமர், முதல்வர், மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., ஆகியோருக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதங்களுக்கு பதில் வராததால், தன் வீட்டில் துாக்கு போட்டு சசிகுமார் தற்கொலை செய்து கொண்டார்.
“பெங்களூருக்கு என்று தனி சுகாதார கொள்கைகள் தேவைப்படுகின்றன. இதுதொடர்பாக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு, அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இதில் மாநகராட்சியும் பங்கு வகிக்கிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்,” என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
சிக்கபல்லாபூர், குடிபண்டே தாலுகா, ஹம்பசந்திரா வருவாய் வட்டத்தின் கிராம கணக்காளர் நாகராஜ். இவர், நிலம் தொடர்பான சேவை வழங்குவதற்கு மஞ்சுநாத் என்ற விவசாயியிடம் 55 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டார். இதுகுறித்து மஞ்சுநாத், லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், மஞ்சுநாத்திடம் நேற்று கிராம கணக்காளர் நாகராஜ் லஞ்சம் வாங்கியபோது அவரை கையும் களவுமாக லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.