/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விவாகரத்து செய்ததால் ஆத்திரம் மனைவியை கொன்ற தலைமை ஏட்டு
/
விவாகரத்து செய்ததால் ஆத்திரம் மனைவியை கொன்ற தலைமை ஏட்டு
விவாகரத்து செய்ததால் ஆத்திரம் மனைவியை கொன்ற தலைமை ஏட்டு
விவாகரத்து செய்ததால் ஆத்திரம் மனைவியை கொன்ற தலைமை ஏட்டு
ADDED : அக் 18, 2025 11:08 PM

பெலகாவி: கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்த காதல் மனைவியை கொலை செய்து தப்பியோடிய தலைமை ஏட்டு கைது செய்யப்பட்டார்.
பெலகாவி மாவட்டம், காக்வாட் தாலுகாவின் பனஜவாடி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் காம்ப்ளே, 36. இவர் நிப்பானி போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணியாற்றினார்; போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார்.
பைலஹொங்களா தாலுகாவின் பெளவடி கிராமத்தில் வசித்தவர் காஷம்மா நெல்லிகனி, 34. இவர் கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இவருக்கும், தலைமை ஏட்டு சந்தோஷ் காம்ப்ளேவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இரண்டு குடும்பங்களின் ஒப்புதலுடன், திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 11 வயதில் மகன் உள்ளார். திருமணமான சில நாட்களிலேயே, சந்தோஷ் காம்ப்ளேவின் குணம் மாறியது. மனைவிக்கு பல விதங்களில் தொல்லை கொடுக்க துவங்கியதாக கூறப்படுகிறது. கணவரின் தொந்தரவு அதிகரித்ததால், வெறுத்த மனைவி, அவரை விட்டு பிரிந்தார்.
சவதத்திக்கு பணி இடமாற்றம் பெற்றுக்கொண்டார். இங்கு வாடகை வீட்டில் தனியாக வசிக்க ஆரம்பித்தார்; மகனை தாய் வீட்டில் விட்டிருந்தார். அப்போதும் கணவரின் தொல்லை தொடர்ந்தது. எனவே பைலஹொங்களா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். ஐந்து மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது.
இதனால் மனைவியை பழி வாங்க சந்தோஷ் காம்ப்ளே முடிவு செய்தார். அக்டோபர் 13ம் தேதி, இரவு 8:00 மணிக்கு காஷம்மா பணி முடிந்து வீட்டுக்கு வந்தார்.
அப்போது சந்தோஷ் காம்ப்ளே, அங்கு வந்தார். இருவருக்கும் காரசார வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த சந்தோஷ், கத்தியால் மனைவியை சரமாரியாக குத்திக் கொலை செய்தார். அதன்பின் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பினார்.
நேற்று முன் தினம், காஷம்மாவின் வீட்டுக்குள் இருந்து, துர்நாற்றம் வீசியது. இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த சவதத்தி போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காஷம்மா கொலையானது தெரிய வந்தது.
சடலத்தை மீட்ட போலீசார், விசாரணை நடத்தி சந்தோஷ் காம்ப்ளேவை நேற்று கைது செய்தனர்.

