‘ஆஷா ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் சாத்தியமில்லை’
‘ஆஷா ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் சாத்தியமில்லை’
UPDATED : நவ 28, 2026 12:00 AM
ADDED : நவ 27, 2026 11:42 PM

பெங்களூரு: ‘‘ஆஷா ஊழியர்களின் கோரிக்கைகளை பேச்சு மூலம் நிறைவேற்ற மாநில அரசு தயாராக இருந்தாலும், உடனடியாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க சாத்தியமில்லை,’’ என, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
மாத சம்பளமாக 15,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆஷா சுகாதார ஊழியர்கள் பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 11வது நாளாக போராட்டம் நீடித்தது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என ஆஷா ஊழியர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர்.
சிவகுமார் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
ஆஷா ஊழியர்கள் அனைவரும் என் சகோதரிகள். உங்களின் கஷ்டத்தை நான் அறிவேன். நீங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பணிக்கு வந்தீர்களே தவிர, போராட்டம் நடத்துவதற்காக வரவில்லை. தயவுசெய்து போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்புங்கள்.
பலரும் என் மீது நம்பிக்கை வைத்து, பணிக்கு திரும்பத் தயாராக இருப்பதாக எனக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பி உள்ளனர். உங்கள் கோரிக்கைகளை பேச்சு மூலம் நிறைவேற்ற மாநில அரசு தயாராக இருக்கிறது.
இருப்பினும், அரசுக்கு அழுத்தம் கொடுத்து இப்போதே எழுத்துப் பூர்வமாகக் கையெழுத்திட்டு தர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால் அது சாத்தியமில்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் துவங்கப்பட்டதிட்டம் என்பதால், ஆஷா ஊழியர்கள் மீது மத்திய பா.ஜ., அரசு பாரபட்சம் காண்பிக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியைப் பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
