6 பேர் கொலை வழக்கில் அதிரடி முக்கிய குற்றவாளி சுட்டு பிடிப்பு
6 பேர் கொலை வழக்கில் அதிரடி முக்கிய குற்றவாளி சுட்டு பிடிப்பு
ADDED : ஜூன் 22, 2026 11:49 PM

விஜயபுரா: விஜயபுராவில் நிலம் தொடர்பாக இரு குடும்பங்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேரை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
விஜயபுரா மாவட்டம், கோவிந்தபூர் கிராமத்தில், ரேவணசித்தப்பா நிராலே குடும்பத்தினருக்கும், இவரது உறவினர் அப்பு கவுடா பாட்டீல் குடும்பத்தினர் இடையே நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
இவ்விவகாரத்தில், கடந்த மே 29ல், புதிதாக வாங்கிய நிலத்தில் ரேவணசித்தப்பா நிராலே குடும்பத்தினர் உட்பட 15 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இதை பார்த்த அப்பு கவுடா ஆதரவாளர் மகேஷ் தல்வார் உட்பட கூட்டாளிகள் 30க்கும் மேற்பட்டோர் அரிவாளால் வெட்டி, துப்பாக்கியால் சுட்டதில், ரேவணசித்தப்பா நிராலே, துண்டப்பா, சிவபுத்ரா, சந்திரசேகர், ராகுல் என ஒரே குடும்பத்தின் ஐந்து பேரும், உள்ளூர்வாசி ஒருவரும் உயிரிழந்தனர். மாநிலத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்சம்பவத்தில், அப்பு கவுடா பாட்டீல் உட்பட 37 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். முக்கிய குற்றவாளியான மகேஷ் தல்வார், தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், விஜயபுரா தாலுகாவின் இட்டன்கல் கிராமத்தில் மகேஷ் தல்வார் பதுங்கியிருப்பதாக, சடச்சன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை அவரை பிடிக்க போலீசார் சென்றனர்.
இதை பார்த்த மகேஷ், போலீசார் மீது கற்களை வீசி, கத்தியால் தாக்கிவிட்டு தப்பினார். தங்களை தற்காத்து கொள்ள, அவரது காலில் சடச்சன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பரசுராம் மனகுலி சுட்டு பிடித்தார்.
இந்த மோதலில் இரு போலீசார் காயமடைந்தனர்.
