/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா மீண்டும்.. கைது!: ஜாமினை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
/
நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா மீண்டும்.. கைது!: ஜாமினை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா மீண்டும்.. கைது!: ஜாமினை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா மீண்டும்.. கைது!: ஜாமினை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : ஆக 15, 2025 05:09 AM

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த ஜாமினை, உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்ததால், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட ஏழு பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
சித்ரதுர்காவை சேர்ந்த நடிகர் தர்ஷனின் ரசிகர் ரேணுகாசாமி, 33, கடந்தாண்டு ஜூன் 8ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், நடிகை பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர், ஜூன் 11ம் தேதி கைது செய்யப்பட்டனர். பவித்ராவுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாலே, ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
கைதான, 17 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு தர்ஷனுக்கு ராஜ உபசாரம் நடக்கும் படங்கள் வெளியானதால், பல்லாரியில் உள்ள ஹிண்டல்கா சிறைக்கு, தர்ஷன் மாற்றப்பட்டார். அதுபோன்று மற்றவர்களும் மாநிலத்தின் பல சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
முதுகு வலியை காரணம் காட்டி, கடந்தாண்டு அக்டோபர் 30ல், ஆறு மாதம் இடைக்கால ஜாமினில் தர்ஷன் வெளியே வந்தார். அதனை தொடர்ந்து, இக்கொலையில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கும், அதன் பின் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட ஏழு பேருக்கும், டிச., 13ல் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு நீதிபதிகள் பர்திவாலா, மஹாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது.
முன்னதாக நடந்த விசாரணையின் போது, கொலை வழக்கில் ஏழு பேருக்கு ஜாமின் வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களும் முடிந்து, நேற்று முடிவு அறிவிப்பதாக கூறியிருந்தனர். அதன்படி நேற்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவில் பல முரண்பாடுகள் உள்ளன. ஜாமின் வழங்குவதற்கான காரணம் அதில் குறிப்பிடவில்லை. தன் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் இயந்திரம் போன்று பயன்படுத்தி உள்ளது.
மிகவும் முக்கியமான உண்மைகளை சட்டப்பூர்வமாக தவிர்த்துவிட்டது. ஜாமின் வழங்கும்போது, விசாரணை கட்டத்தில் உள்ள வழக்கின் சாட்சிகளை, உயர்நீதிமன்றம் முக்கியமானதாக கருத வேண்டும்.
குற்றத்தின் தன்மை, குற்றம் சாட்டப்பட்டவரின் தன்மை, விசாரணையில் தலையிடுவதற்கான ஆபத்துகளை கருத்தில் கொள்ளாமல், இத்தகைய முக்கியமான வழக்கில், ஜாமின் வழங்கியிருப்பது முற்றிலும் தேவையற்றது.
உயர் நீதிமன்ற உத்தரவால் வழங்கப்பட்ட சுதந்திரம், நீதியின் நிர்வாகத்துக்கு அச்சுறுத்தலாக அமைகிறது. இது விசாரணை செயல்முறையை தடம் புரள செய்யும். புகழ், அதிகாரம் அல்லது சலுகை எதுவாக இருந்தாலும், அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வளவு பெரிய மனிதர்களோ அல்லது சிறிய மனிதர்களோ, சட்டம் அனைவருக்கும் ஒன்று தான். எனவே, ஏழு பேரின் ஜாமின் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இத்தகவல், அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பவித்ரா கவுடா வீட்டுக்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர். அதுபோன்று, ஹொசகரஹள்ளி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தர்ஷனை காமாட்சிபாளையா போலீசார் கைது செய்தனர்.
அதுபோன்று பிரதோஷ், லட்சுமண், நாகராஜ் ஆகியோரை அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் கைது செய்தனர். சித்ரதுர்காவில் இருந்த ஜெகதீஷ், அனுகுமார் ஆகியோரை கைது செய்து பெங்களூரு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். நள்ளிரவில் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.
... பாக்ஸ் ...
ரசிகர்கள் மீது தடியடி
தர்ஷனை கைது செய்து அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதையறிந்த அவரது ரசிகர்கள், போலீஸ் நிலையம் முன் குவிந்தனர். தர்ஷனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். போலீசார் எவ்வளவோ கூறியும் கேட்கவில்லை. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
... புல் அவுட் ...
சிறை அதிகாரிகள் முடிவு
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதை மதிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நாட்டில் சட்டத்தை விட பெரியவர்கள் யாரும் இல்லை. இம்மண்ணின் சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். சிறையில் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படாது. தர்ஷன் பெங்களூரு சிறையில் இருப்பாரா அல்லது பல்லாரிக்கு மாற்றப்படுவாரா என்பதை சிறை துறை அதிகாரிகள் முடிவு செய்வர்.
- பரமேஸ்வர்,
உள்துறை அமைச்சர்
***