/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
166 முறை ரத்த தானம் செய்த தாவணகெரேயின் ஆதிகேசவ்
/
166 முறை ரத்த தானம் செய்த தாவணகெரேயின் ஆதிகேசவ்
ADDED : நவ 15, 2025 11:01 PM

மனிதர்கள் ரத்த தானம் செய்வது, பிறரது விலை மதிப்பற்ற உயிரை காப்பாற்ற உதவுகிறது. ரத்த தானம் செய்வோருக்கு இதய ஆரோக்கியம் மேம்படுவதுடன், மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது. ஆனாலும் ஏனோ ரத்த தானம் செய்ய மனிதர்கள் அதிக ஆர்வம் காட்டுவது இல்லை.
இத்தகையவர்களுக்கு மத்தியில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் 166 முறை 'ஓ நெகட்டிவ்' ரத்தத்தை தானம் செய்து உள்ளார். அவரை பற்றி பார்க்கலாம்.
தாவணகெரே டவுன் வித்யாநகர் சேர்ந்தவர் ஆதிகேசவ் பிரகாஷ் சாஸ்திரி. 1987 ம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி முதன் முறையாக ரத்த தானம் செய்தார். அன்று முதல் தற்போது வரை 38 ஆண்டுகள் 166 முறை ரத்த தானம் செய்து உள்ளார்.
விழிப்புணர்வு இதுகுறித்து ஆதிகேசவ் கூறியதாவது:
எனது ரத்த வகை 'ஓ நெகட்டிவ்'. இந்த வகை மிகவும் அரிதானது. 1987 ல் முதன் முறையாக ரத்த தானம் செய்தேன். எனது ரத்தத்தை பயன்படுத்தி, குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
பின், தொடர்ந்து ரத்த தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அன்று முதல் எனது ரத்த தான பணத்தை துவக்கினேன்.
ஜாதி, மதம் பார்த்து ரத்த தானம் செய்வது இல்லை. உயிருக்கு போராடுவோரை காப்பாற்ற வேண்டும் இது தான் எனது குறிக்கோள்.
ரத்த தானம் செய்ததன் மூலம் இதுவரை 92 குழந்தைகள் உட்பட 166 பேரின் உயிரை காப்பாற்றி உள்ளேன். எனது நண்பர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 'லைப்லைன்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் கொடுக்கிறோம்.
பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று, ரத்த தானம் கொடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
உயிர்கள் காப்பாற்ற... எனது மனைவி உஷா 12 முறையும், எனது இரண்டு மூத்த சகோதரர்கள் 117 முறையும் ரத்த தானம் செய்து உள்ளனர். எனது மகளும் அவரது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ரத்த தானம் செய்கிறார். தற்போது அபெரெசிஸ் எனப்படும் புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது.
இது ரத்த அணுக்களை அகற்றி மீதமுள்ள ரத்தத்தை உடலில் செலுத்துகிறது. இந்த வசதி 1987 ல் இல்லை. அப்போது முழு ரத்தமும் கொடுக்க வேண்டி இருந்தது. 'ஓ நெகட்டிவ்' பிரிவு ரத்தத்தை அதிக முறை தானம் செய்தவர்கள் பட்டியலில், இந்தியாவில் நான், இரண்டாவது இடத்தில் உள்ளேன்.
நான் கொடுத்த ரத்த தானம் மூலம் உயிர் பிழைத்த பல குழந்தைகள், தற்போது நல்ல நிலையில் உள்ளனர். அவர்களை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். 2008 ல் கர்நாடக விருது கிடைத்தது.
தாவணகெரே மாவட்ட கன்னட ராஜ்யோத்சவா விருதையும், பல அமைப்புகளின் விருதையும் பெற்று உள்ளேன். விருது பெறுவது முக்கியமல்ல; உயிர்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

