/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நீண்ட இழுபறிக்கு பின் நியமன எம்.எல்.சி.,க்கள்... அறிவிப்பு!; டாக்டர் ஆரத்தி கிருஷ்ணா உட்பட நால்வருக்கு 'லக்'
/
நீண்ட இழுபறிக்கு பின் நியமன எம்.எல்.சி.,க்கள்... அறிவிப்பு!; டாக்டர் ஆரத்தி கிருஷ்ணா உட்பட நால்வருக்கு 'லக்'
நீண்ட இழுபறிக்கு பின் நியமன எம்.எல்.சி.,க்கள்... அறிவிப்பு!; டாக்டர் ஆரத்தி கிருஷ்ணா உட்பட நால்வருக்கு 'லக்'
நீண்ட இழுபறிக்கு பின் நியமன எம்.எல்.சி.,க்கள்... அறிவிப்பு!; டாக்டர் ஆரத்தி கிருஷ்ணா உட்பட நால்வருக்கு 'லக்'
ADDED : செப் 07, 2025 10:43 PM

கர்நாடக மேல்சபைக்கு அரசு பரிந்துரைக்கும் நபர்கள், கவர்னர் ஒப்புதலுடன் எம்.எல்.சி.,யாக பதவி வகிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. அரசு பரிந்துரையின்படி, 11 பேர் எம்.எல்.சி.,க்களாக இருக்கலாம். பா.ஜ., ஆட்சியில் எம்.எல்.சி.,க்களாக நியமிக்கப்பட்ட விஸ்வநாத், சாந்தாராம் சித்தி, பாரதி ஷெட்டி, தலவார் சாபண்ணா; காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட உமாஸ்ரீ, சீதாராம், சுதம் தாஸ் ஆகியோரும் தற்போது பதவியில் உள்ளனர்.
பா.ஜ., சார்பில் எம்.எல்.சி.,யாக இருந்து பதவியை ராஜினாமா செய்துவி ட்டு, காங்கிரசில் இணைந்த யோகேஸ்வரால் ஒரு இடம் காலியானது. இதுபோல காங்கிரசின் வெங்கடேஷ், பிரகாஷ் ரத்தோட், திப்பேசாமி ஆகியோரின் பதவிக்காலம் முடிந்ததால், நான்கு எம்.எல்.சி., இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது .
தினேஷ் அமின் மட்டு கர்நாடக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ரமேஷ் பாபு, கர்நாடக அரசின் வெளிநாட்டு வாழ் இந்தியர் குழு தலைவர் டாக்டர் ஆரத்தி கிருஷ்ணா, மூத்த பத்திரிகையாளரும், முதல்வர் சித்தராமையாவின் முன்னாள் ஊடக ஆலோசகருமான தினேஷ் அமின் மட்டு, எஸ்.சி., சமூக தலைவர் சாகர் ஆகியோரது பெயர்களை, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிற்கு அரசு முதலில் பரிந்துரை செய்தது.
இவர்களில் தினேஷ் அமின் மட்டு மீது, நில ஆக்கிரமிப்பு புகார் இருப்பதாக, கவர்னருக்கு சில சமூக ஆர்வலர்கள் கடிதம் எழுதினர். இதனால் அரசு அனுப்பிய பட்டியலை, கவர்னர் அலுவலகம் திருப்பி அனுப்பியது. சாகருக்கு எம்.எல்.சி., பதவி கொடுக்க கட்சிக்குள் எதிர்ப்பு நிலவியது. இதனால், இருவர் பெயர்களையும் நீக்கிவிட்டு, புதியவர்களை பட்டியலில் சேர்க்க முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் முயற்சித்தனர்.
கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து, நான்கு எம்.எல்.சி.,க்கள் பெயர்களை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனாலும், கடும் போட்டி காரணமாக, பெயர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது. இதற்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கடும் அதிருப்தி தெரிவித்தார்.
6 ஆண்டு பதவி ஒரு வழியாக கட்சி மேலிட தலைவர்கள் ஒப்புதலுடன், இறுதியாக நான்கு பேர் பட்டியலை கவர்னருக்கு, அரசு அனுப்பி வைத்தது. தினேஷ் அமின் மட்டு, சாகர் பெயர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக காங்கிரசின் எஸ்.சி., பிரிவு பொது செயலர் ஜக்கப்பனவர், மைசூரு பத்திரிகையாளர் சிவகுமார் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த பட்டியலுக்கு கவர்னர் அலுவலகம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் நான்கு பேரும் நியமன எம்.எல்.சி.,க்கள் ஆகி உள்ளனர்.
இவர்களில், ரமேஷ் பாபு பெங்களூரை சேர்ந்தவர். ஆரத்தி கிருஷ்ணா சிக்கமகளூரின் சிருங்கேரியை சேர்ந்தவர். ஜக்கப்பனவர் ஹுப்பள்ளியை சேர்ந்தவர். ரமேஷ் பாபு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். ஆரத்தி கிருஷ்ணா ஒக்கலிகர். மற்ற இருவரும் எஸ்.சி., சமூகத்தினர்.
இவர்களில் ரமேஷ் பாபுவின் பதவிக்காலம், 2026ம் ஆண்டு ஜூலை 21ல் முடிகிறது. மற்ற மூன்று பேரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். இந்த நான்கு பேர் நியமனத்தின் மூலம், மேல்சபையில் காங்கிரஸ் பலம் 33 ஆக அதிகரிக்க உள்ளது.
காலியாக இருந்த நான்கு இடங்களில், மூன்று இடங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே காலியாக இருந்தது. ஒரு இடம் இந்த ஆண்டின் ஜனவரியில் காலியானது. மூன்று இடங்களை, 11 மாதங்களுக்கு பின்பும், ஒரு இடத்தை 8 மாதங்களுக்கு பின்னரும் அரசு நிரப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நீண்ட இழுபறி முடிவுக்கு வந்து உள்ளது.