/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுற்றுலா பயணியரை சுண்டியிழுக்கும் அகரா ஏரி
/
சுற்றுலா பயணியரை சுண்டியிழுக்கும் அகரா ஏரி
ADDED : நவ 05, 2025 11:59 PM

ஒரு காலத்தில், பெங்களூரில் பல நுாறு ஏரிகள் இருந்தன. நகரின் இயற்கை எழிலை அதிகரித்தன. அன்றைய மன்னர்கள் தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து, மக்களின் குடிநீருக்காக ஏரிகள் அமைத்தனர். ஆனால் நாளடைவில் நகர்மயமானதால், ஏரிகள் ஒவ்வொன்றாக மாயமாகின.
ஏரிகள் இருந்த இடங்களில், வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது பெங்களூரில் தப்பி பிழைத்த ஏரிகளில், அகரா ஏரியும் ஒன்று. 98 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் உள்ளது. இது எட்டாம் நுாற்றாண்டில் அமைக்கப்பட்டதாக, வரலாற்று சாசனங்கள் கூறுகின்றன.
அன்றைய காலத்தில், அகரா மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்கள், குடிநீருக்கும், விவசாயத்துக்கும் இந்த ஏரி பயன்பட்டது.
மடிவாளா ஏரியில் இருந்து, மழைநீர்க் கால்வாய் வழியாக, அகரா ஏரிக்கு தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதனால் ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதற்கு முன்பு ஆயிரக்கணக்கான பறவைகள், ஏரியில் அடைக்கலம் பெற்றன.
கூட்டம், கூட்டமாக நடமாடும் பறவைகளை காண, சுற்றுலா பயணியர் குவிவர். ஆனால் குடியிருப்புகளின் கழிவுநீர், தொழிற்சாலைகளின் ரசாயனம் கலந்து, அசுத்தமடைந்தது. இதனால் பறவைகள் வருவது குறைந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஏரி மேம்பாட்டு வாரியம், அகரா ஏரியை சீரமைத்து, புது வடிவம் கொடுத்தது. ஏரியின் பழைய அழகு திரும்பியுள்ளது. சுற்றுலா தலமாக மாறி, சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. பறவைகளை ஈர்க்க துவங்கியுள்ளது.
ஏரிக்கு நடுவில் தீவு அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் பழ மரங்கள் நடப்பட்டுள்ளன. கடந்தாண்டு மழைக்காலத்தில் பல விதமான பறவைகள் இங்கு வந்து, இன விருத்தி செய்தன.
ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்டதால், மீன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெங்களூரின் முக்கியமான சுற்றுலா தலங்களில், இதுவும் ஒன்றாகும்.
தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் ஏரியை சுற்றி வந்து ரசிக்கின்றனர். அகரா சுற்றுப்பகுதியில் வசிக்கும் பலரும், நேரம் கிடைக்கும்போது, இங்கு வந்து பொழுது போக்குகின்றனர்.
குடும்பத்தினர், நண்பர்களுடன் பார்க்க வேண்டிய இடமாகும். தினமும் காலை, மாலையில் நடைப்பயிற்சிக்காக இளைஞர்கள், இளம் பெண்கள், மூத்த குடிமக்கள், சிறார்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
- நமது நிருபர் -

