தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அமேசான், ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட் குடோன்களில்...  சோதனை! : ரூ.ஒரு கோடி மதிப்பு காலாவதி பொருட்கள் பறிமுதல்

அமேசான், ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட் குடோன்களில்...  சோதனை! : ரூ.ஒரு கோடி மதிப்பு காலாவதி பொருட்கள் பறிமுதல்

அமேசான், ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட் குடோன்களில்...  சோதனை! : ரூ.ஒரு கோடி மதிப்பு காலாவதி பொருட்கள் பறிமுதல்


ADDED : செப் 09, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 03:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரில் கடந்த மாதம், கோரமங்களாவில் தனியார் நிறுவனம் ஒன்று, 'பெப்டைடு பார்ட்டி' ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு, எப்.எஸ்.டி.ஏ., எனும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு பிரிவு தடை விதித்தது.

பெட்டைடு பார்ட்டி என்றால், உணவில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் பற்றி விவாதிக்கும் கூட்டம். அமெரிக்காவில் இதுபோன்ற கூட்டம், பிரபலம்.

அமேசான் இந்த பார்ட்டி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், தேவனஹள்ளியில் உள்ள அதிநவீன பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்காவில் அமைந்து உள்ள, அமேசான் நிறுவனத்தின், பி.எல்.ஆர்., - 6 வளாகத்தில், அதிகாரிகள் உணவு சேமிப்பு மற்றும் வினியோக மையங்களை ஆய்வு செய்தனர்.

இணையதளம் மற்றும் மின்னணு வணிக தளங்கள் மூலம் விற்கப்படும் பொருட்களின் லேபிளில், பொருளின் உற்பத்தி, காலாவதி தேதி, சேமிப்பு காலம் மற்றும் பிற உணவு பாதுகாப்பு தரநிலைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் தவறான அல்லது முழுமையற்ற லேபிள் கொண்ட, 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்களும், காலாவதியான 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் என, மொத்தம் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அத்துடன், தேவையான உரிமம் இல்லாமல், கொள்முதல் செய்யப்பட்ட 2.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனேகல் அதுபோல, ஆனேகல்லில் உள்ள பி.எல்.ஆர்., 7 மையத்திலும் தவறான அல்லது முழுமையற்ற லேபிள் கொண்ட 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்கள் என, 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதுபோல, உரிமம் இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்ட, 1.57 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

எச்.பி.ஆர்., லே - அவுட், ஆறாவது பிரதான சாலையில் உள்ள சப்தா பஜாரில் மளிகை பொருட்கள், பால், காய்கறிகள், தயிர் உட்பட பல்வேறு உணவு பொருட்கள் ஆன்லைன் டெலிவரி தளங்கள் மூலம் வாங்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து, அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, காலாவதியான முந்திரி பருப்புகள், பிஸ்கட், ராகி மாவு, சிக்கன் கட்லெட், பனீர், குக்கீஸ், கொட்டைகள், முட்டைகள், மாவு உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லிங்கராஜபுரத்தில் உள்ள, லியோ 7 என்டர்பிரைசசில், 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான, காலாவதியாகும் தருவாயில் உள்ள ஊட்டச்சத்து பொருட்கள், குளிர்பானங்கள், சாக்லேட்கள், இனிப்புகள், நெய், கொட்டைகள், விதைகளை பறிமுதல் செய்தனர்.

இன்ஸ்டாமார்ட் பெங்களூரு ஊரக மாவட்டம், ஹொஸ்கோட்டில், ஸ்விக்கி நிறுவனத்தின், 'இன்ஸ்டாமார்ட்' விற்பனை மையம் உள்ளது. இங்கும் 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அத்துடன் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான மற்றும் தவறாக லேபிள் ஒட்டப்பட்ட உணவு பொருட்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அத்துடன், சுகாதாரமற்ற நிலை, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ், விதிமுறைகளை மீறியதால், இம்மையத்தை அதிகாரிகள் மூடினர்.

இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையின் மூலம், காலாவதியான அல்லது காலாவதியாகும் தருவாயில் உள்ள 1.05 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள்; லேபிள் ஒட்டப்பட்ட 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள்; 4.02 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்களும் என மொத்தம் 1.43 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு மற்றும் மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதற்கிடையில், விகாஸ் சவுதாவில் நேற்று சுகாதார துறை அமைச்சர் காதர், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

தொடரும் பின், அவர் அளித்த பேட்டி:

கர்நாடகாவில் கடந்த வாரம் உணவு, மருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான, காலாவதியாகும் தருவாயில் உள்ள உணவு, மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ஆய்வின் போது, சில கடைகளில் காலாவதியான உணவு மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. பெங்களூரு ஆனேகல், தேவனஹள்ளி உட்பட பல பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்து உள்ளன.

இது தொடர்பாக இணையதளத்தில் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளன.

காலாவதியான மருந்துகளுக்கு மீண்டும் புதிதாக லேபிள் ஒட்டி, விற்பனை செய்வதாக அதிகாரிகளின் கவனத்துக்கு வந்து உள்ளது. காலாவதியான பொருட்களை சட்ட விரோதமாக சேமித்து வைத்திருந்த குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளன.

சமூக அக்கறையின்றி பொது சுகாதாரத்துடன் விளையாடும் இத்தகைய நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.

மருந்து, உணவுகளை வாங்கும்போது, காலாவதி தேதி, லேபிள் மற்றும் பிற தேவையான தகவல்களை பொது மக்கள் சரிபார்க்க வேண்டும். இது தொடர்பாக புகார் அளிக்க, 'கியூ.ஆர்.,' குறியீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us