அமித் ஷாவுக்கு உடல் நலம் பாதிப்பு: டில்லி சென்றார்
அமித் ஷாவுக்கு உடல் நலம் பாதிப்பு: டில்லி சென்றார்
ADDED : செப் 19, 2026 11:32 PM
ஹூப்பள்ளி: கர்நாடகா மாநிலம், ஹூப்பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், நிகழ்ச்சியில் பங்கேற்காமல் டில்லி திரும்பினார்.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியின் கப்பபூரில், ஜெகத்குரு கங்காதர் மஹா சுவாமிகள் மூறுசாவிர மடத்தின் மருத்துவ கல்லுாரியின் புதிய கட்டடம் மற்றும் 1,200 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டு உள்ளது.
இதை திறந்து வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் இரவு, ஹூப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்தார். அவரை, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உட்பட தலைவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
நேற்று காலை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து நிகழ்ச்சிக்கு புறப்பட தயாரானார். ஆனால் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. உணவு ஒவ்வாமையால் பாதிப்பு ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவ குழுவினர், ஹோட்டலுக்கு வரவழைக்கப்பட்டனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஹோட்டலிலேயே தங்கி ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினர்.
எனினும், ஹோட்டலில் ஓய்வெடுத்த அமித் ஷா, தன் இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, டில்லி புறப்பட்டு செ ன்றார். நேற்று நடந்த நிகழ்ச்சிகளை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மாநில அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
