ADDED : நவ 21, 2025 06:09 AM

பெ ங்களூரில் உள்ள க்வான்ஸ் டேக்வான்டோ அகாடமியில் பயிற்சி பெற்று வருபவர் அன்கிதா. 15. பத்தாம் வகுப்பு படிக்கும் அன்கிதா, பல ஆண்டுகளாக டேக்வாண்டோ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர், மாநில, தேசிய அளவிலான, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் பல பதக்கங்களை பெற்றார். இதன் காரணமாக, 3வது ஆசிய இளைஞர்கள் விளையாட்டு போட்டியில் இந்திய அணியில் பங்கேற்பதற்கு அன்கிதாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த தேர்வு போட்டியில், இந்தியா முழுதும் இருந்து பலம் வாய்ந்த வீராங்கனையர் பங்கேற்றனர். இதிலும் வெற்றி பெற்று அசத்தினார். இதனால், ஆசிய இளைஞர் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நேஷனல் கேம்பில் இரண்டு மாதங்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டார்.
கற்ற வித்தைகளை காட்ட, கடந்த மாத இறுதியில், மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனில் நடந்த 3வது ஆசிய இளைஞர் போட்டியில் இந்திய அணி சார்பாக பங்கேற்றார். மகளிர், 49 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அன்கிதாவுக்கு எதிராக, 2024 டேக்வாண்டோ உலக சாம்பியனான சீனாவின் செய்ங் லிங் வாங் களமிறங்கினார்.
இந்த போட்டியில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார். அரங்கம் அதிரும் அளவிற்கு அடியின் சத்தம் கேட்டது.
இருப்பினும், சீன வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார். இதனால், மனம் வருந்தினாலும், சோர்வடையவில்லை. உலக அரங்கில் போட்டியிட தேவையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து, அன்கிதா கூறுகையில், ''இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவது என் வாழ்நாள் கனவு. இந்த கனவை நடத்தி காட்டினேன். நம் நாட்டுக்காக பதக்கங்கள் வாங்கி பெருமை சேர்ப்பேன். இதுவே என் லட்சியம். இதற்காக, அனுதினமும் அயராது பாடுபடுவேன்,'' என்றார்.
- நமது நிருபர் -

