ADDED : ஜூலை 08, 2026 11:11 PM

- நமது நிருபர் -
உத்தர கன்னடா மாவட்டம், ஹொன்னாவரில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் அப்சர கொண்டா நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. முருடேஷ்வரா அருகில் உள்ள அழகிய சுற்றுலா தலங்களில் இது ஒன்று.
இங்கு, 33 அடி உயரத்தில் இருந்து நீர் கொட்டுகிறது. இதையே, அப்சர கொண்டா என்று அழைக்கின்றனர். இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பே, கடற்கரை நோக்கி வீழ்வது தான். சொர்க்கத்தில் இருந்து தேவதைகள் வந்து, இந்த குளத்தில் குளிப்பர் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். எனவே தான், இந்த நீர்வீழ்ச்சியை அப்சர கொண்டா என்று அழைக்கின்றனர்.
நீர்வீழ்ச்சிக்கு பொது மக்கள் எளிதாக செல்ல வசதியாக, படிக்கட்டுகள் கட்டப்பட்டு உள்ளது. இதன் மூலம் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தை எளிதில் அடையலாம். இந்த குளம் குளிப்பதற்கும், விளையாடுவதற்கும் ஏற்ற இடமாகும். மலையில் இருந்து கொட்டும் இந்த நீர் கடலில் கலக்கிறது.
அதே போல, நீர்வீழ்ச்சியில் இருந்து சில நிமிடம் நடந்து சென்றால், சிறிய மலை உச்சியை அடையலாம். அங்கிருந்தபடி கடற்கரையும், சூரிய அஸ்தமனமாகும் அழகிய காட்சியையும் காணலாம்.
இது தவிர, இந்த மலையில் பாண்டவர் குகைகள் என சிறிய, பெரிய குகைகள் உள்ளன. பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது, இக்குகைகளில் தங்கியிருந்ததாக மக்கள் நம்புகின்றனர்.
இது தவிர, நீர்வீழ்ச்சியில் குளித்த பின், குழந்தைகள் விளையாடுவதற்கென்றே பூங்காவும் அமைத்துள்ளனர்.
நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் மகா கணபதி, உக்ர நரசிம்மர் கோவில் அமைந்து உள்ளது. ஹொசநகரில் உள்ள ராமசந்திரபுர மடத்தின் ஒரு கிளை மடமும் இங்குள்ளது.
எப்படி செல்வது?
1 விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 165 கி.மீ., பயணித்து, ஹொன்னாவர் செல்லலாம். அங்கிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பஸ் உள்ளது.
2 ரயிலில் செல்வோர், ஹொன்னாவர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 7 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு பஸ், டாக்சி, ஆட்டோவில் செல்லலாம்.
3 பஸ்சில் செல்வோர், ஹொன்னாவர் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
