ADDED : ஏப் 15, 2025 06:53 AM
பீதர்: ஹூப்பள்ளியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்கார முயற்சிக்கு ஆளாகி, கொலையான சம்பவத்தின் அதிர்ச்சியே நீங்காத நிலையில், பீதரில் சிறுமியை கடத்த முயற்சி நடந்தது.
பீதரின், வித்யாநகர் லே - அவுட்டின், 11வது கிராசில் வசிப்பவர் சதீஷ் பக்காசவுடேகர். நேற்று காலை இவரது 5 வயது மகள், வீட்டு வளாகத்தில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர், சிறுமியை கவனித்தார். வீட்டு முன் பைக்கை நிறுத்திவிட்டு, நோட்டம் விட்டார்.
அக்கம், பக்கத்தில் யாரும் இல்லாததால், கேட்டை திறந்து உள்ளே நுழைந்து, சிறுமியை கடத்தி செல்ல முயற்சித்தார். அப்போது சிறுமியின் பெற்றோர் வெளியே வந்ததால், சிறுமியை விட்டு விட்டு அங்கிருந்து பைக்கில் தப்பியோடினார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து, பீதர் நகர் போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். அந்நபரை பிடிக்கும்படி வலியுறுத்தினர்.