/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜனார்த்தன ரெட்டி வீட்டில் தீ விபத்து காங்., - எம்.எல்.ஏ., காரணம் என பகீர்
/
ஜனார்த்தன ரெட்டி வீட்டில் தீ விபத்து காங்., - எம்.எல்.ஏ., காரணம் என பகீர்
ஜனார்த்தன ரெட்டி வீட்டில் தீ விபத்து காங்., - எம்.எல்.ஏ., காரணம் என பகீர்
ஜனார்த்தன ரெட்டி வீட்டில் தீ விபத்து காங்., - எம்.எல்.ஏ., காரணம் என பகீர்
ADDED : ஜன 24, 2026 05:24 AM

பல்லாரி: பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டியின் ஆதரவாளர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக, ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
பல்லாரி டவுன் சிறுகுப்பா சாலை அகம்பாவியில், பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டியின் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன், வால்மீகி சிலை திறப்பு நிகழ்ச்சி தொடர்பான பேனர், சமீபத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த பேனரை அகற்றியதால், கடந்த 1ம் தேதி இரவு கலவரம் ஏற்பட்டது. தனியார் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில், காங்கிரஸ் தொண்டர் ராஜசேகர் ரெட்டி என்பவர் இறந்தார். கலவரம் குறித்து சி.ஐ.டி., விசாரிக்கிறது.
இந்நிலையில், பல்லாரி டவுன் ஜி ஸ்கொயர் லே - அவுட்டில், ஜனார்த்தன ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு இணைந்து கட்டிய வீட்டில், நேற்று மாலை 6:00 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென வேகமாக பரவி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு படையினர் தீயை அணைத்த பின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிற்குள் இருந்த பொருட்கள் எரிந்து சேதமாகின.
இதுகுறித்து ஜனார்த்தன ரெட்டியின் தம்பி சோமசேகர் ரெட்டி கூறியதாவது:
ஜனார்த்தன ரெட்டியும், ஸ்ரீராமுலுவும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். வீடுகள் வாங்க நினைப்போருக்கு காண்பிக்க, இந்த வீட்டை மாடலுக்காக கட்டி இருந்தனர். இங்கு யாரும் வசிக்கவில்லை. கண்காணிப்பு கேமராவும் இல்லை. வீட்டில் திடீரென தீப்பிடிக்க சாத்தியம் இல்லை. பேனரை அகற்றியதால் பிரச்னை ஏற்பட்ட போது, ஜனார்த்தன ரெட்டி வீட்டிற்கு தீ வைப்பேன் என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத்ரெட்டி கூறினார். இப்போது அப்படியே செய்து விட்டார். அவரது ஆதரவாளர்கள் பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ வைத்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ''பல்லாரி கலவரம் நடந்து 20 நாட்களில், எனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு எம்.எல்.ஏ., பரத் ரெட்டியே காரணம். பல்லாரி எஸ்.பி.,யிடம் நான் பேசி உள்ளேன்,'' என்றார்.
ஜனார்த்தன ரெட்டி தற்போது பெங்களூரில் உள்ளார். சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கிறார். பரத் ரெட்டி சட்டசபைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், சட்டசபை கூடும் போது, ஜனார்த்தன ரெட்டி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது பிரச்னையாக எதிரொலிக்க உள்ளது.

