UPDATED : நவ 23, 2026 12:00 AM
ADDED : நவ 22, 2026 10:48 PM
கர்நாடகாவில் சமீப நாட்களாக, புற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. மாரடைப்பால் ஏற்படும் இறப்புகளும் அதிகரிக்கின்றன. இதற்கு முறையற்ற உணவு பழக்கமும், பிடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்களும் காரணம் என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் புகையிலை பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. சிறுவர்களும், இளைஞர்களும் புகை பழக்கத்துக்கு அடிமையாகின்றனர்.
பள்ளி, கல்லுாரிகளின் 100 மீட்டர் எல்லையில், புகையிலை பொருட்களை விற்க அரசு தடை விதித்திருந்தும், சில இடங்களில் பள்ளி, கல்லுாரிகளின் அருகிலேயே புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன.
இத்தகைய பொருட்கள் சில்லரை விலைக்கு கிடைப்பதால், இளம் தலைமுறையினர் எளிதில் வாங்குகின்றனர். இதை கட்டுப்படுத்த தட்சிண கன்னட மாவட்டம், நடவடிக்கை எடுத்துள்ளது. கடைகளில் சில்லரை விலைக்கு சிகரெட், பிடி விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
தட்சிண கன்னட மாவட்ட கூடுதல் கலெக்டர் ராஜு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது
மாவட்டத்தில் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட, இளம் தலைமுறையினர் புகையிலை பொருட்களுக்கு பலியாகின்றனர். இதை தடுக்க கடுமையான விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இனி கடைகளுக்கு புதிதாக உரிமம் அளிக்கும் போதோ அல்லது லைசென்சை புதுப்பிக்கும் போதே பீடி, சிகரெட், புகையிலை பொருட்களை சில்லரையாக விற்க கூடாது. இது போன்று விற்பதால், சிறுவர்களும் இதை எளிதாக வாங்குகின்றனர். இதை கட்டுப்படுத்த இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘கடைகளில் சில்லரை விலையில் பீடி. சிகரெட், புகையிலை பொருட்கள் கிடைக்காது’ என, அறிவிப்பு போர்டு வைப்பது கட்டாயம்.
பொது இடங்களில் புகை பிடிக்க வாய்ப்பளிக்கும் ஹோட்டல்கள், கபேக்கள், உதிரியாக சிகரெட் விற்கும் கடைகள் மீது, சுகாதாரத்துறை, போலீஸ் துறை, உள்ளாட்சிகள் இணைந்து சோதனை நடத்த வேண்டும்.
வியாபார உரிமத்தை மீறுவோர் மீது, வழக்கு பதிவு செய்யப்படும். அபராதம் விதிப்பதுடன், உரிமமும் ரத்து செய்யப்படும்.
புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டம், வெறும் கோப்புகளில் இருந்தால் மட்டும் போதாது. இதை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். கடைகளில் சிறு வயதினருக்கும், மாணவர்களுக்கும் சிகரெட்களை விற்கின்றனர். இது குறித்து அதிகமான புகார்கள் வருகின்றன, சிறு வயதினருக்கு சிகரெட் விற்போர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
