மாலையிலும் குப்பை அள்ள பெங்களூரு மாநகராட்சி திட்டம்
மாலையிலும் குப்பை அள்ள பெங்களூரு மாநகராட்சி திட்டம்
ADDED : ஜூன் 28, 2026 10:49 PM
பெங்களூரு: குப்பை பிரச்னை அதிகம் உள்ள பகுதிகளில், மாலையிலும் குப்பை அள்ள, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் எனும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வரராவ் கூறியதாவது:
பெங்களூரில் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, ஜி.பி.ஏ., திட்டம் வகுத்துள்ளது. சாலையோரம் உட்பட, கண்ட இடங்களில் குப்பை போடுவதால், சுற்றுச்சூழல் அசுத்தமாகிறது. வரும் நாட்களில் குப்பை பிரச்னை அதிகம் உள்ள இடங்களை அடையாளம் கண்டு, அங்கு மாலை நேரத்திலும் குப்பை அள்ளும்படி, துப்புரவு தொழிலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக ஆட்டோ டிப்பர்களை அனுப்பி, குப்பை அள்ளப்படும். மாலையிலும் குப்பை அள்ளுவதால், அனைத்து இடங்களிலும், துாய்மையை காப்பாற்றவும், சாலை ஓரங்களில் குப்பை அள்ளப்படுவதை தடுக்கவும் உதவியாக இருக்கும்.
நகரை துாய்மையாக வைத்து கொள்வதில், பொதுமக்களும் கூட, ஜி.பி.ஏ.,வுடன் ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் குப்பை பிரச்னைக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். எந்த பகுதியிலாவது, குப்பை குவிந்து கிடந்தாலோ அல்லது ஆட்டோ டிப்பர்கள் வரா விட்டாலோ, உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தகவல் தாருங்கள். தகவல் வந்தவுடன் துப்புரவு ஊழியர்கள் அந்த இடத்துக்கு சென்று, பிரச்னைக்கு தீர்வு காண்பர்.
குப்பை நிர்வகிப்பில் ஈடுபட்டுள்ள, தன்னார்வ சேவகர்கள் சாலை ஓரத்தில் குப்பை போடக் கூடாது என, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலைகளில் குப்பை போடுவதை கண்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவியுங்கள். விதிமுறைகளை மீறி குப்பை போடுவோருக்கு, அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
