சிறையில் வேலை செய்யாமல் பொழுதை போக்கும் பிரஜ்வல்
சிறையில் வேலை செய்யாமல் பொழுதை போக்கும் பிரஜ்வல்
ADDED : ஜூலை 11, 2026 04:27 AM

பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில், ஆயுள் தண்டனைக்கு ஆளாகி பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைபட்டுள்ள, முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, சிறையில் வேலை செய்யாமல் ஓய்வாக பொழுது போக்குவது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹாசன் லோக்சபா தொகுதியின், ம.ஜ.த., எம்.பி.,யாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. கடந்த, 2024ல் இவர் தன் பண்ணை வீட்டில் பணியாற்றிய 47 வயது பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான, வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் அதில் இருந்தது.
பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என, உறுதி செய்த மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடந்தாண்டு ஆகஸ்டில் தீர்ப்பளித்தது.
அவர், பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்.
சிறையில் வேலை செய்ய வேண்டும் என்பது விதிமுறை. என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை, கைதிகளே தேர்வு செய்து கொள்ளலாம். அதன்படி பிரஜ்வல் ரேவண்ணா சிறையின் நுாலகத்தில் உதவியாளர் வேலையை, தேர்வு செய்து கொண்டார். இதற்காக அவரகுக்கு, 520 ரூபாய் தினக்கூலி நிர்ணயிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சில நாட்கள், பணியாற்றிய இவர், அதன்பின் நுாலகம் பக்கமே தலை காட்டவில்லை. அவர் மீதான மேலும் நான்கு வழக்குகள், விசாரணை கட்டத்தில் உள்ளன. இதை காரணம் காட்டி, நுாலக பணிக்கு செல்லாமல் அவர் நழுவுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
