பங்கார்பேட்டை -- பூதிக்கோட்டை ரயில்வே மேம்பாலம் திறப்பு
பங்கார்பேட்டை -- பூதிக்கோட்டை ரயில்வே மேம்பாலம் திறப்பு
ADDED : ஆக 29, 2026 11:17 PM
பங்கார்பேட்டை: பங்காருபேட்டை -- பூதிக்கோட்டை வழித்தடத்தில், ரயில்வே மேம்பாலத்தை மத்திய இணையமைச்சர் அமைச்சர் வி.சோமண்ணா நேற்று திறந்து வைத்தார்.
ரயில்வே துறையின் 100 சதவீதம் நிதியுதவியுடன், 31.51 கோடி ரூபாய் செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், அமைச்சர் வி.சோமண்ணா பேசுகையில், ''ரயில்வே வாயில்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தணிக்கும் வகையில், நாடு முழுதும் மேம்பாலங்கள் மற்றும் சுரங்க பாலங்கள் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
முன்னாள் பா.ஜ., - எம்.பி., முனிசாமி பேசுகையில், ''இந்த மேம்பாலம் பங்காருபேட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கை. ரயில்வே கேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேம்பால பணிக்கு அனுமதி வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது,'' என்றார்.
கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு பேசுகையில், ''காமசமுத்திரம் உட்பட கோலார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மேம்பாலம் மற்றும் சுரங்க பாலங்கள் பணிகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பங்காருபேட்டை ரயில் நிலையத்தின் மேம்பாட்டுக்காக பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என்றார்.
