ADDED : செப் 26, 2026 11:09 PM

- நமது நிருபர் -
உயிரை விட மேலாக நினைத்த மகனை இழந்து தவிக்கும் தாய் ஒருவர், தன் மகனின் நினைவாக மரங்கள், செடிகள் நட்டு பசுமையாக்க முடிவு செய்துள்ளார். முதற்கட்டமாக அரச மரக்கன்றை நட்டுள்ளார்.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரேவை சேர்ந்தவர் சராவதி கவுடா. தற்போது, இவர் துபாயில் வசிக்கிறார். இவரது மகன் ஆதித்யகவுடா. மைசூரில் இருந்தார். சமீபத்தில் என்ன காரணத்தாலோ, மனம் வருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சராவதி, துபாயில் இருந்து மைசூரு வந்து, மகனுக்கு இறுதி சடங்குகள் செய்தார்.
மகனின் அஸ்தியை காவிரி ஆற்றில் கரைப்பதற்காக, ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு வந்தார். கோவிலை தரிசிக்க, பிரசித்தி பெற்ற கரிபெட்டா மலைக்கு, அவர் வந்தார். இங்குள்ள பசுமையான சூழல், குளிர்ந்த காற்று, அமைதியான சூழ்நிலை அவர் மனதை கவர்ந்தன.
மகனின் நினைவுகளை கண்ணீரில் கரைப்பதற்கு பதில், அர்த்தமுள்ளதாக்கி, இயற்கையுடன் இணைக்க வேண்டும் என, சராவதி விரும்பினார். எனவே, சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷை தொடர்பு கொண்டார். அவரது ஆலோசனைப்படி, கரிபெட்டா மலையில், மகனின் பெயரில், அரச மரக்கன்றை நட்டார்.
இதை தன் மகனின் உயிராக நினைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி, கவனமாக பார்த்து கொள்ளும்படி, ரமேஷிடம் கேட்டு கொண்டார்.
மரக்கன்று நட்டதுடன், கரிபெட்டா மலையில் பசுமையை அதிகரிப்பதில், தானும் பங்கேற்பதாக சராவதி உறுதி அளித்துள்ளார்.
