ரவுடிகளுடன் பாரில் பார்ட்டி ஏ.எஸ்.ஐ., அதிரடி சஸ்பெண்ட்
ரவுடிகளுடன் பாரில் பார்ட்டி ஏ.எஸ்.ஐ., அதிரடி சஸ்பெண்ட்
ADDED : செப் 24, 2026 12:29 AM

சிக்கமகளூரு: ரவுடிகளுடன் விடிய விடிய மதுபான பார்ட்டி நடத்திய, சகராயபட்டணா போலீஸ் நிலைய ஏ.எஸ்.ஐ., வீரேந்திரா, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிக்கமகளூரு மாவட்டம், கடூர் தாலுகாவின் சகராயபட்டணா நகர் போலீஸ் நிலையத்தில் ஏ.எஸ்.ஐ.,யாக பணியாற்றுபவர் வீரேந்திரா.
இவர், ஒரு வாரத்துக்கு முன், கடூரின் எம்மேதொட்டி முஸ்லாபுரா கிராமத்தில், பார் ஒன்றில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் ரவுடிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன், இசை எழுப்பி, பாடல்களை போட்டு ஆட்டம் போட்டனர். இதனால் அப்பகுதியினர் பாதிக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த மக்கள், அங்கு குவிந்து போராட்டம் நடத்தினர்.
மதுபான பாரை மூடும்படி வலியுறுத்தினர். ஆனால் பாரில் விடிய, விடிய பார்ட்டி நடந்துள்ளது.
இது பற்றி தொடர்ந்து, புகார் வந்ததால் ஏ.எஸ்.ஐ., வீரேந்திராவை, சஸ்பெண்ட் செய்து, சிக்கமகளூரு எஸ்.பி., ஜிதேந்திரா, நேற்று உத்தரவிட்டார்.
உத்தரவில் அவர் கூறியுள்ளதாவது:
இம்மாதம் 15ம் தேதியன்று ஏ.எஸ்.ஐ., வீரேந்திரா, உடல் சரியில்லை என கூறி, விடுப்பு எடுத்தார்.
ஆனால் அன்று இரவு 9:00 மணியளவில், எம்மேதொட்டி கிராமத்தில் உள்ள, 'சன் மூன் குரூப் பார் அண்ட் ரெஸ்டாரென்ட்' என்ற மதுபான பாரில், 80 முதல் 90 பேரை சேர்த்து கொண்டு, சகராயபட்டணா போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் உள்ள நவீன் நாயக் என்பவரின் பிறந்த நாள் பார்ட்டியை நடத்தியுள்ளார்.
பட்டாசு வெடித்து கொண்டாடி, கிராமத்தினருக்கு தொல்லை கொடுத்துள்ளார். போலீசில் பணியாற்றுபவர், துறையின் கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்படாமல், பொது வாழ்க்கையில் நற்பண்புகளுடன் இருப்பது அவசியம்.
ஆனால், வீரேந்திரா எதிர்மாறாக இருக்கிறார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி நடந்து கொண்டார். எனவே அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
