/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
/
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
ADDED : ஏப் 29, 2025 06:08 AM
பெங்களூரு: மாநகராட்சியின் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அரசு இருந்தபோது, அரசு உயர்நிலை பள்ளி மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்பின், மாணவர்களுக்கும் சைக்கிள் வழங்கப்பட்டது.
ஆனால் அதன்பின் வந்த அரசுகள், திட்டத்தை தொடராமல், கிடப்பில் போட்டன.
கடந்தாண்டு இலவச சைக்கிள் திட்டம் செயல்படுத்தப்படலாம் என, எதிர்பார்த்து மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே தன் கட்டுப்பாட்டில் இயங்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி சமூக நலப்பிரிவு சிறப்பு கமிஷனர் சுரல்கர் விகாஸ் கிஷோர் கூறியதாவது:
பெங்களூரு மாநகராட்சி, 2025 - 26ம் ஆண்டு பட்ஜெட்டில், மக்கள் நலத்திட்டங்களுக்கு 721.40 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கடந்தாண்டை விட, இம்முறை கூடுதலாக 167 கோடி ரூபாய் ஒதுக்கியது.
இந்த கூடுதல் நிதியை பயன்படுத்தி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் கிடைக்கும்.
மாநகராட்சி மட்டுமல்ல, பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரசு, தனியார் பள்ளி மாணவர்களும் கூட, இலவச சைக்கிள் பெற்றுக் கொள்ளலாம்.
மாநகராட்சி எல்லையில், எட்டாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை எத்தனை, இவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து, மாநகராட்சி ஆய்வு செய்யும்படி, மாநகராட்சி சமூக நலப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியால் ஏற்படும் காற்று மாசுவை குறைக்க, சைக்கிள் பயன்படுத்தும் திட்டமும் ஒன்றாகும்.
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதன் மூலம், காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.