/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'நோய்களை தீர்க்கும்' பத்ரகிரி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி
/
'நோய்களை தீர்க்கும்' பத்ரகிரி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி
'நோய்களை தீர்க்கும்' பத்ரகிரி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி
'நோய்களை தீர்க்கும்' பத்ரகிரி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி
ADDED : ஆக 14, 2025 11:11 PM

ஷி வமொக்கா மாவட்டம் பத்ராவதி சிவசுப்பிரமணிய சுவாமி மடம் சார்பில், சிக்கமகளூரு மாவட்டம் சுகர்பாரம் பி.எச்.சாலையில், 1973 ல் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பத்ரிகிரியாரால், பத்ரிகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டப்பட்டது. 76 படிக்கட்டுகள் ஏறி சென்றால், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியரை தரிசிக்கலாம்.
இக்கோவில் கட்டப்பட்ட நாளில் இருந்து ஆண்டுதோறும் வைகாசி விசாகம், ஆடிகிருத்திகை, ஐப்பசி கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், தை பொங்கல், காவடி திருவிழா, பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் நவபாசானத்தால் ஆன 'ரசபாவி' மருந்து சேர்த்து, பல நோய்களை பத்ரகிரியார் குணமாக்கி உள்ளார்.
கோவிலுக்குள் நுழைந்தவுடன் தங்க கொடிமரம் வரவேற்கிறது. வள்ளி - தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர், வனதுர்கை, பஞ்சமுக விநாயகர், அகத்தியர், கார்த்திகை பெண்கள், பத்ரலிங்கேஸ்வர், சிவன் சன்னிதி முன் அதிகார நந்தி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சூரியன் - சந்திரன், 63 நாயன்மார்கள், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் சன்னதிகள், சேக்கிழார், பெங்கிமுனி, சப்தமாதர்கள், கன்னிமூல கணபதி, விரபத்ரர், பஞ்சபூத லிங்கங்கள், சகஸ்ரலிங்கம், மனோன்மணி, அருணகிரிநாதர், வைத்தியநாத காலபைரவர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.
இரண்டு டன் எடையில், ஐந்தே முக்கால் அடி உயரத்தில் பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட இரண்டு கோவில் மணிகள் உள்ளன.
இது தவிர, வள்ளுவனின் புலமைக்கும், வாய்மைக்கும் பெருமை சேர்க்கும் வகையில், சுவாமிகளின் ஆசிரமத்தின் கோபுரத்தில் வள்ளுவருக்கும், அவ்வையாருக்கும் சிலைகள் வைத்து கவுரவித்துள்ளார் பத்ரகிரியார்.
இக்கோவிலில் மனமுருகி வேண்டுவோருக்கு, திருமண தடை நீக்கம், மகப்பேறு, பல நோய்கள் குணமடைவதால், இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற கோவிலில், இம்மாதம் 11ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடிகிருத்திகை விழா துவங்கியது.
வரும் 15 ல் பரணி காவடித்திருவிழாவை ஒட்டி, அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூபதரிசனம், 5:00 மணிக்கு பூஜை, 8:00 முதல் 10:00 மணி வரை சாந்தி பூஜை, மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5:30 மணிக்கு தீபாராதனை, இரவு 9:00 மணிக்கு ராக்கால பூஜை; 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
வரும் 16ல் ஆடிக்கிருத்திகையை ஒட்டி, அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூபதரிசனம், 5:00 மணிக்கு விளா பூஜை, 8:00 மணிக்கு காலை சாந்தி பூஜை, 9:00 மணிக்கு சிறுகாலை சாந்தி பூஜை, மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5:30 மணிக்கு தீபாராதனை, இரவு 11:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு 08282 - 267206 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டு கொணடுள்ளனர்.