/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இசை கேட்டால் புவி அசைந்தாடும் பக்தியை பரப்பும் பக்த பிருந்தாவன் பெங்களூரு
/
இசை கேட்டால் புவி அசைந்தாடும் பக்தியை பரப்பும் பக்த பிருந்தாவன் பெங்களூரு
இசை கேட்டால் புவி அசைந்தாடும் பக்தியை பரப்பும் பக்த பிருந்தாவன் பெங்களூரு
இசை கேட்டால் புவி அசைந்தாடும் பக்தியை பரப்பும் பக்த பிருந்தாவன் பெங்களூரு
ADDED : ஆக 19, 2025 02:00 AM

பெங்களூரு பொம்மனஹள்ளி கோடிசிக்கனஹள்ளியில், 'பக்த பிருந்தாவன் பெங்களூரு' என்ற, ஆன்மிக அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகிகளான சி.எஸ்.பத்மகுமார், ஆர்.கிருஷ்ணன், ஆர்.ராமநாதன் மேற்பார்வையில், இசை மூலம் பக்தியை பரப்புகின்றனர்.
இதுகுறித்து சி.எஸ்.பத்மகுமார் கூறியதாவது:
எங்கள் அமைப்பின் சார்பில் சம்பிரதாய பஜனை செய்யப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் பராம்பரியத்தை காப்பது, வளர்ப்பது. இப்பணியில் பக்தர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர். சம்பிரதாய பஜனை முறையில் நாம சங்கீர்த்தனம், ஸ்ரீராதா கிருஷ்ண பஜனையை நடத்துகிறோம். எங்கள் செயல்பாடுகள் பெரும்பாலும் பன்னர்கட்டா சாலையில் உள்ள, விஜயா வங்கி லே - அவுட் பகுதியில் செயல்படுகின்றன.
பாராயணம் இசை மூலம் பக்தியின் சாரத்தை பரப்ப, நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம். 300 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட சம்பிரதாய பஜனை, முன்பு கிராமங்களில் மட்டுமே நிலைத்து இருந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக மார்கழி மாத பஜனையை கூறலாம். ஆனால் தற்போது நகரங்களிலும் சம்பிரதாய பஜனைகள் அதிகம் நடக்கின்றன.
நமது நாட்டின் பல நகரங்களிலும், வெளிநாடுகளிலும் சம்பிரதாய பஜனை, தற்போது போற்றப்படும் ஒரு கலையாக மாறி உள்ளது. எங்களது முக்கிய நோக்கமே சனாதனத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தான். அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்.
வாரந்தோறும் சனிக்கிழமை கோடிசிக்கனஹள்ளி வெங்கடேச பெருமாள் கோவிலில், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பாடுகிறோம். அதனை தொடர்ந்து நாமசங்கீர்த்தனம் நடத்தப்படுகிறது. இதை, கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் விஜயா வங்கி லே - அவுட் பகுதியில், இரண்டு நாட்கள் ஸ்ரீராதா கிருஷ்ணா கல்யாண பஜனை நடக்கிறது.
இரு நாட்களும், 2,000 பக்தர்கள் பங்கேற்கின்றனர். வரும் 23, 24ம் தேதிகளில், பன்னர்கட்டா சாலை ஆனந்த் சுவர்ணா கன்வென்ஷன் ஹாலில், எங்கள் அமைப்பு துவங்கியதன் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சி நடக்கிறது.
புஷ்பாஞ்சலி காஞ்சி மடத்தின், 59வது மடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீதர அய்யாவாள், மருதாநல்லுார் சத்குரு சுவாமிகள் ஆகிய மகான்களின் உஞ்சவிருத்தி, பஜனை போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கிறோம்.
ஸ்ரீராதா கல்யாணம், சீதா கல்யாணம், அய்யப்ப சாஸ்தா பிரீத்தி, புஷ்பாஞ்சலி, மார்கழி வீதி பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், எங்கள் அமைப்பு சார்பில் ஆன்மிகம் நிறைந்த அனுபவத்தை வழங்குகிறோம். தெய்வீக கலாசார பாரம்பரியத்தை இளைஞர்களிடம் பரப்புவதே, எங்களது முதன்மை குறிக்கோள். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -