ADDED : அக் 16, 2025 11:19 PM

ஒரு காலத்தில், சமைக்கவும், துணி துவைக்கவும், குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தை பராமரிக்கவும் மட்டுமே, பெண்கள் என கருதி, அடுப்பங்கறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இப்போது அந்த சுவரை உடைத்துக் கொண்டு, வெளியே வந்து சுதந்திரமாக பறக்கின்றனர்.
போலீஸ் துறை, ஐ.டி.பி.டி., மருத்துவம், விளையாட்டு, விண்வெளி உட்பட, அவர்கள் சாதனை துறைகளே இல்லை. கர்நாடக அரசு துறையிலும் கூட, பெண் அதிகாரிகள் உயர் பதவி வகிக்கின்றனர்.
திருமணமாகி, குழந்தைகள் பிறந்தாலும், சாதிக்க முடியும் என, பெண்கள் நிரூபித்துள்ளனர். இவர்களின் பட்டியலில் மைசூரின் பாரதியை சேர்க்கலாம். இவர் கராத்தே சாம்பியன். மைசூரு நகரில் வசிக்கும் பாரதி, 50. பி.யு.சி., வரை படித்த இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகளும் உள்ளன. சிறு வயதில் இருந்தே, தற்காப்பு கலையான கராத்தே கற்று, பல கோப்பைகள் வென்றவர்.
டில்லியில் நடந்த ஏஷியன் கராத்தே பெடரேஷன் சார்பில் நடந்த கராத்தே போட்டியில், கர்நாடகா சார்பில் பங்கேற்று, முதல் பரிசு வென்றார். அது மட்டுமின்றி, பெண்கள், சிறுமியருக்கு தற்காப்பு கலையான கராத்தே கற்று தருகிறார். இவரது சாதனையை அடையாளம் கண்டு, கராத்தே அசோசியேஷன் ஆப் இந்தியா, மகளிர் கராத்தே சங்கம், சகி பவுண்டேஷன் உட்பட, பல்வேறு அமைப்புகள், பாரதிக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளன. இவரும் பாரதி கண்ட புதுமைப்பெண்.
இவரிடம் பயிற்சி பெண்கள், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றுள்ளனர். இந்த கலையால் பெண்களுக்கும், சிறுமியருக்கும் தன்னம்பிக்கை ஏற்படுகிறது.
இதுவரை 1,000க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு கராத்தே பயிற்சி அளித்துள்ளார். அதே நேரத்தில், குடும்ப தலைவியாக தன் பொறுப்பில் இருந்தும் விலகவில்லை. குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்வதுடன், சிறந்த கராத்தே மாஸ்டராகவும் பெயர் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, பாரதி கூறியதாவது:
நான் பெண்கள், சிறுமியர் இருக்கும் இடத்துக்கு சென்று, கராத்தே பயிற்சி அளிக்கிறேன். கிராமங்கள், நகர்ப்பகுதிகளுக்கு சென்று கற்றுத் தருகிறேன். பள்ளிகள், உரைவிட பள்ளிகளுக்கு சென்று தற்காப்பு கலை கற்றுத்தருகிறேன்.
சமீப நாட்களாக, நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது, பெண்கள், சிறுமியருக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியம் என்றே தோன்றுகிறது. பெண்கள், சிறுமியர் பலாத்காரத்துக்கு ஆளாவதை தவிர்க்க வேண்டுமானால், அவர்கள் கராத்தே கற்பது நல்லது. தங்களை தற்காத்துக்கொள்ள கராத்தே சிறந்த அஸ்திரம். இதை மனதில் கொண்டு, அதிகமான பெண்கள், சிறுமியருக்கு தற்காப்பு கலை கற்றுத் தருகிறேன்.
சில நாட்களுக்கு முன்பு, மைசூரில் பலுான் விற்க வந்த சிறுமி, பலாத்காரத்துக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மனதுக்கு வருத்தமளிக்கிறது. கராத்தே கற்றுக்கொண்டால், தங்களை சீண்டும் கயவர்களை தாக்கி, பாடம் புகட்டலாம். அனைத்து நேரத்திலும், கடவுள் நம்மை காப்பாற்ற வரமாட்டார். நமது தைரியமும், மன உறுதியும் துணையாக நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -