/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பயமின்றி பயணிக்க 'பிங் ஆட்டோக்கள்' பெண்களின் பாதுகாப்புக்கு டிரஸ்ட்
/
பயமின்றி பயணிக்க 'பிங் ஆட்டோக்கள்' பெண்களின் பாதுகாப்புக்கு டிரஸ்ட்
பயமின்றி பயணிக்க 'பிங் ஆட்டோக்கள்' பெண்களின் பாதுகாப்புக்கு டிரஸ்ட்
பயமின்றி பயணிக்க 'பிங் ஆட்டோக்கள்' பெண்களின் பாதுகாப்புக்கு டிரஸ்ட்
ADDED : அக் 12, 2025 10:12 PM

பெங்களூரில் பெண்கள் இனி, இரவு நேரத்தில் பயமின்றி நட மாடலாம். தயங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால், இவர்களுக்காக, 'பிங் ஆட்டோ' போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. வாகனங்களில் பயணிக்கும் போது ஓட்டுநர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான உதாரணங்கள் உள்ளன. இதனால் பலரும் வாடகைக் காரில் பயணிக்க தயங்குகின்றனர். இவர்களின் வசதிக்காக தற்போது, பிங் ஆட்டோக்கள் வந்துள்ளன. இவற்றை பெண் ஓட்டுநர்கள் இயக்குகின்றனர்.
கை கொடுக்கும் கை பெங்களூரின் நம்ம சாரதி டிரஸ்ட் அமைப்பு, 'நம்ம சாரதி' திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பிங் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இது பெண்களின் பாதுகாப்பான பயணத்துக்காகவும், திருநங்கையரின் நலனுக்காகவும் கொண்டு வரப்பட்டது. ஆண்களாக இருந்து, அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறிய திருநங்கையருக்கு, நம்ம சாரதி டிரஸ்ட் அமைப்பு, கை கொடுத்து உதவுகிறது.
அவர்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சி அளிக்கிறது. லைசென்சும் பெற்றுத்தரும். இவர்களுக்காக பிங் ஆட்டோக்கள் வாங்கவும் தயாராகிறது. 2026ம் ஆண்டில் 1,000 ஓட்டுநர்கள் தயாராவர். இந்த எண்ணிக்கையை 2030ம் ஆண்டில் 10,000 ஆக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பயிற்சி மையங்கள் இது குறித்து, நம்ம சாரதி டிரஸ்ட் பிரதிநிதிகள் கூறியதாவது:
பெங்களூரில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியதாக உள்ளது. இவர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, 'நம்ம சாரதி' திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். இந்த திட்டம் திருநங்கையருக்கு உதவும். ஆணாக இருந்து, அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய திருநங்கையருக்கு ஓட்டுநர் பயிற்சியளிக்கப்படும். இதற்காக பெங்களூரு முழுதும் ஐந்து பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
மூன்று மாதங்கள் வரை ஆட்டோ ஓட்டுவது, சாலை போக்குவரத்து விதிகள், வாகன நிர்வகிப்பு உட்பட தேவையான பயிற்சி அளிக்கப்படும். ஆர்.டி.ஓ., மற்றும் நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில், இவர்களுக்கு லைசென்ஸ், வாகன கடன் பெறவும், டிரஸ்ட் உதவி செய்யும். திருநங்கையருக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் ஓட்டுநர் பயிற்சி கிடைக்கும்.
இத்தகைய திட்டத்தால், பெண்கள், திருநங்கையர் யாரையும் சாராமல், சுதந்திரமாக வாழ்க்கை நடத்தலாம். ஆட்டோக்களில் பயணிக்கும் பெண்களும், பாதுகாப்பு உணர்வுடன் நிம்மதியாக பயணிக்கலாம். இரவு நேரத்திலும் பிங் ஆட்டோக்கள் இயங்கும் என்பதால், பணிக்கு செல்லும் பெண்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -