பா.ஜ., - காங்., கட்சியினர் சிக்கமகளூரில் பயங்கர மோதல்
பா.ஜ., - காங்., கட்சியினர் சிக்கமகளூரில் பயங்கர மோதல்
ADDED : மே 21, 2026 10:16 PM

சிக்கமகளூரு: பா.ஜ., - எம்.எல்.சி., ரவி முன், காங்கிரஸ் - பா.ஜ., தொண்டர்கள் பயங்கர மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கமகளூரு டவுன் ராம் புராவில் இருந்து சக்திநகர் வரை, 8 கி.மீ.,க்கு சாலை புதுப்பிப்பு பணி நடக்கிறது. இந்த பணியை ஆய்வு செய்ய, சிக்கமகளூரு தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போதைய எம்.எல்.சி.,யுமான ரவி, தன் ஆதரவாளர்களுடன் நேற்று சென்றார்.
அப்போது அங்கு வந்த சிக்கமகளூரு காங்கிரஸ் எம்.எல்.ஏ., தம்மையாவின் ஆதரவாளர்கள், ரவிக்கு எதிராக, 'கோ பேக்' கோஷம் எழுப்பினர். இதற்கு ரவியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தம்மையாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனால், தம்மையா - ரவியின் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ரவி முன்னிலையில் இரு கட்சியினரும் பயங்கர மோதலில் ஈடுபட்டனர்.
தம்மையா ஆதரவாளர்கள் சாலையில் புரண்டு போராட்டம் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரால், இரு கட்சியினரையும் சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து, ரவியை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
தாக்க முயற்சி ரவி கூறியதாவது:
எம்.எல்.ஏ.,வாக நான் இருந்த போது, கடந்த, 2022ல் பா.ஜ., ஆட்சியின் போது, சாலை புதுப்பிப்பு பணிக்கு நிதி வாங்கி வந்தேன். அந்த நிதியை தம்மையா இப்போது பயன்படுத்துகிறார். காங்கிரஸ் அரசு நிதி ஒதுக்கியதாக பொய் சொல்கிறார்.
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், சாலை புதுப்பிப்பு பணி நடக்கவில்லை. பணியின் தரத்தை ஆய்வு செய்ய வந்த என்னை, சில காங்கிரஸ் தொண்டர்கள் மிரட்ட பார்க்கின்றனர். என்னை தாக்க முயற்சி நடந்தது. இதை எல்லாம் கண்டு ஒழிந்து ஓடும் நபர், நான் இல்லை.
சிக்கமகளூரு எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்து, 20 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து உள்ளேன். எனக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய தம்மையா தான், இப்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில், சிக்கமகளூரு நகரில் ஒரு வேலை கூட நடக்கவில்லை.
உறவினர்கள் பெயரில் மதுக்கடை திறந்து உள்ளார். விலை உயர்ந்த மதுவை குடிக்கும் தம்மையா, மதுக்கடையில் மூன்றாம் தர மதுக்களை விற்பனை செய்கிறார். அவரை போன்று மோசமான நபர் நான் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் சாபம் எம்.எல்.ஏ., தம்மையா கூறியதாவது:
ரவி, 20 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்து என்ன செய்து உள்ளார் என மக்கள் கேட்கின்றனர். அவர் பதவியில் இல்லை என்பதற்காக சிக்கமகளூரில் எந்த பணியும் நடக்கவிடாமல் தடுக்க பார்க்கிறார். கான்ட்ராக்டர் வேண்டுமென்றே பணி செய்யாமல் இழுத்தடிக்கிறார். அவர் ரவியின் உறவினர்.
எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ரவியின் நோக்கம். மழை காலம் துவங்குவதற்கு முன், சாலை பணிகளை முடிக்க உத்தரவிட்டு இருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. மழை ஆரம்பித்தால் பணி நடக்காது. எம்.எல்.ஏ., வேலையே செய்யவில்லை என மக்கள் திட்ட வேண்டும் என்பதே ரவியின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
