UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 10:14 PM
பெங்களூரு: தலைமை தேர்தல் அதிகாரி ஆபீஸ் முன்பு போராட்டம் நடத்திய முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் மீது போலீசில் பா.ஜ., புகார் செய்துள்ளது.
எஸ்.ஐ.ஆர்., பணியில் முறைகேடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி, பெங்களூரு சேஷாத்ரி சாலையில் உள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு, முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் நேற்று முன்தினம் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம், எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையில், பா.ஜ.,வினர் நேற்று புகார் அளித்தனர்.
பின், அசோக் அளித்த பேட்டி:
நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் முதல்வரும், அமைச்சர்களும், கர்நாடகாவில் உள்ள வங்கதேசத்தினர், பாகிஸ்தானியர் ஓட்டுகளை பாதுகாக்க, அமைச்சரவை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
சுதந்திர பூங்காவை தவிர வேறு எங்கும் போராட்டம் நடத்த கூடாது என்று, உயர் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. ஆனாலும் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய முதல்வரே, எந்தவித அச்சமுமின்றி சட்டத்தை மீறியுள்ளார். உள்துறை அமைச்சரும் அங்கு தான் இருந்தார். அவர்கள் யாரும் சட்டத்தை பின்பற்ற மாட்டார்களா?
சாதாரண மக்கள் போராட்டம் நடத்தியிருந்தால் போலீஸ் விட்டிருக்குமா? முதல்வர், அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, போலீஸ் கமிஷனரிடம் கேட்டுள்ளேன்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய யார் வேண்டுமென்றாலும் படிவம் 7ன் கீழ் விண்ணப்பிக்கலாம். இதுபற்றி காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
