பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் சார்பில் மத்துாரில் இன்று விநாயகர் ஊர்வலம்
பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் சார்பில் மத்துாரில் இன்று விநாயகர் ஊர்வலம்
ADDED : செப் 15, 2026 09:07 PM
மாண்டியா: கடந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்ட மாண்டியாவின் மத்துார் பகுதியில், பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைமையில் இன்று பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இதனால், இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
மாண்டியா மாவட்டம், மத்துார் சன்னேகவுடா லே - - அவுட்டில் கடந்த ஆண்டு நடந்த விநாயகர் ஊர்வலம் சென்ற போது, மசூதியில் இருந்து சிலர், விநாயகர் சிலை மீது கல்வீசினர். இச்சம்பவம் வன்முறையாக வெடித்தது. 21 பேர் கைது செய்யப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு விநாயகர் சிலை மீது கல்வீச்சு சம்பவம் நடந்த பகுதியில், பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைமையில் இன்று பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.
இந்த ஊர்வலத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், ம.ஜ.த., இளைஞரணி தலைவர் நிகில், பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், ஊர்வலத்தில் ஹிந்து அமைப்பினர், பொது மக்கள் என 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இம்முறை ஊர்வலத்தில் அக்கம், பக்கத்தில் நிறுவப்பட்டுள்ள 108 விநாயகர் சிலைகளை கரைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், மத்துார் பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த ஊர்வலத்தின் மூலமாக தங்கள் அரசியல் ஒற்றுமையை காண்பிக்க பா.ஜ., மற்றும் ம.ஜ.த., முடிவு செய்துள்ளன.
