பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கு எதிராக பாதயாத்திரை துவக்கம் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் பங்கேற்பு
பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கு எதிராக பாதயாத்திரை துவக்கம் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 09, 2026 11:15 PM

பெங்களூரு: பிடதி டவுன்ஷிப் திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தி, ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி கட்சிகள் இணைந்து நடத்தும் பாதயாத்திரை நேற்று துவங்கியது.
ராம்நகரின் பிடதி தாலுகாவில் உள்ள ஒன்பது கிராமங்களில் 9,600 ஏக்கர் நிலத்தில் பிடதி டவுன்ஷிப் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளன.
இந்நிலையில் டவுன்ஷிப் திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தி, பிடதியில் இருந்து பெங்களூருக்கு பாதயாத்திரை நடத்த போவதாக, ம.ஜ.த., அறிவித்தது. இதில் பங்கேற்க கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி மூன்று நாட்கள் நடக்கும் பாதயாத்திரை, பிடதி தாலுகாவின் பைரமங்களா கிராமத்தில் நேற்று துவங்கியது. மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்ட தலைவர்கள் பாதயாத்திரையை துவக்கி வைத்தனர்.
ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தலைமையில் நடந்த பாதயாத்திரையில், இரு கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
குமாரசாமி பேசியதாவது:
விவசாயிகள் நலனுக்காகவே கூட்டணி கட்சியினர் இணைந்து பாதயாத்திரை நடத்துகிறோம். கடந்த 515 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை அரசு கண்டுகொள்ளவில்லை. எந்த அழுத்தத்திற்கும் பெண்களும், விவசாயிகளும் அடிபணியாமல் இருந்தால் பிடதி டவுன்ஷிப் திட்டத்தை அரசால் செயல்படுத்த முடியாது.
கடந்த 2006ல் நான் முதல்வராக இருந்த போது பிடதி டவுன்ஷிப் திட்டம் துவங்கப்பட்டது. அப்போது இருந்த நிலை இப்போது இல்லை. முதலில் நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு 2 கோடி ரூபாய் தருவதாக அரசு கூறியது. இப்போது 3 கோடி ரூபாய் தருவதாக கூறுகின்றனர். என்ன வியாபாரம் செய்கிறீர்களா?
போலீசை பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தும் முயற்சி நடக்கிறது.அமைச்சர் பாலகிருஷ்ணாவை எனது பழைய நண்பர் என்று சொல்ல மாட்டேன். அவர் பல கட்சிக்கு சென்றவர்.
ஒரு சில விவசாயிகள் மட்டுமே திட்டத்திற்கு ஒப்பு கொண்டு நிலம் வழங்குகின்றனர். சுயமரியாதையுள்ள விவசாயிகள் நிலத்தை வழங்கவில்லை. காங்கிரஸ் மேலிடத்திற்கு பணம் வழங்க, பிடதி டவுன்ஷிப் திட்டத்தை செயல்படுத்த பார்க்கின்றனர். விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பைரமங்களாவில் துவங்கிய பாதயாத்திரை பிடதியில் நேற்று நிறைவு பெற்றது. இன்று 2வது நாளாக பிடதியில் துவங்கி கும்பலகோடு கன்னிமினிகே சுங்கச்சாவடி வரை பாதயாத்திரை நடக்கிறது.
50 சதவீத நிலம்:
முதல்வர் உறுதி
எதிர்க்கட்சிகள் பாதயாத்திரை குறித்து, முதல்வர் சிவகுமார் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:
பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கு அரசியல் காரணங்களால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சாலை, குடிநீர், மெட்ரோ, விளையாட்டு மைதானத்தை உள்ளடக்கிய ஏ.ஐ., நகரமாக பிடதி டவுன்ஷிப் இருக்கும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பெங்களூரு தெற்கு மாவட்டத்திற்கு புதிய வடிவம் கிடைக்கும். முந்தைய அரசு ஒரு ஏக்கர் நிலத்திற்கு 25 லட்சம் ரூபாய் விலை நிர்ணயித்தது. நாங்கள் 3 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளோம்.
பணம் வேண்டாம் என்று கூறும் விவசாயிகளுக்கு 50 சதவீத நிலம் வழங்கப்படும். நிலம் கொடுக்க விரும்பாத விவசாயிகளுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்க மாட்டோம். வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்போர் அரசுடன் கைகோர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேவகவுடாவிடம் ஆசி
பாதயாத்திரைக்கு புறப்படும் முன், முன்னாள் பிரதமரும், தனது தாத்தாவுமான தேவகவுடாவிடம், நிகில் காலில் விழுந்து ஆசி பெற்றார். நிகிலுக்கு பச்சை துண்டு அணிவித்து வாழ்த்து கூறிய தேவகவுடா, விவசாயிகளுக்காக தீவிரமாக போராட்டம் நடத்த வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
