/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,வை சேர்ந்த மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கோபம்!
/
பா.ஜ.,வை சேர்ந்த மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கோபம்!
பா.ஜ.,வை சேர்ந்த மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கோபம்!
பா.ஜ.,வை சேர்ந்த மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கோபம்!
ADDED : மார் 02, 2025 06:19 AM

மேல்சபையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டது. இதனால், மேல்சபை தலைவரான பா.ஜ.,வைச் சேர்ந்த பசவராஜ் ஹொரட்டி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ''காங்கிரசார் பெரும்பான்மை பெற்றுள்ளனர். அவர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் கொடுத்தால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிடுவேன்,'' என, மேல்சபை தலைவர் பசவராஜ் தெரிவித்தார்.கோபம்!
பெங்களூரு: கர்நாடக மேல்சபை தலைவராக இருப்பவர் பசவராஜ் ஹொரட்டி. ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1980 முதல் தொடர்ந்து எட்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.
ம.ஜ.த.,வில் இருந்தபோது, முதன் முறையாக 2018 ஜூன் முதல் 2018 டிசம்பர் வரை மேல்சபை தலைவராக பதவி வகித்தார்.
பின், மீண்டும் 2021 பிப்ரவரி முதல் 2022 மே வரை தலைவராக இருந்தார். ம.ஜ.த.,வில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். இதையடுத்து, 2022 டிசம்பர் 21ல் மீண்டும் மேல்சபை தலைரவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று வரை அதே பதவியில் நீடித்து வருகிறார்.
பெரும்பான்மை
சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் அரசு, தங்கள் மசோதாக்களை நிறைவேற்ற வேண்டுமென்றால், மேல்சபையிலும் பெரும்பான்மை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டது.
இந்த நிலையில், ஆசிரியர், பட்டதாரிகள் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலால், மேல்சபையிலும் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றது.
அன்று முதல் பசவராஜ் ஹொரட்டியை மாற்றுவது குறித்து காங்கிரஸ் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
கடந்தாண்டு பெலகாவியில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது, பா.ஜ., - காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பா.ஜ., உறுப்பினர் சி.டி.ரவி, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை பார்த்து ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சுவர்ண விதான் சவுதாவுக்குள், சி.டி.ரவியை, லட்சுமி ஹெப்பால்கர் ஆதரவாளர்கள் தாக்க முயற்சித்தனர். அன்றிரவு விதான் சவுதாவுக்குள் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே ரவியை, வலுக்கட்டாயமாக போலீஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
சி.ஐ.டி., விசாரணை
இவ்வழக்கு சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. மேல்சபையில் ஆய்வு செய்ய வேண்டுமென்றால், மேல்சபை தலைவரின் அனுமதி பெற வேண்டும். ஆனால், இதற்கு பசவராஜ் ஹொரட்டி அனுமதி மறுத்துவிட்டார்.
இவ்வழக்கை மேல்சபை நெறிமுறை குழுவுக்கு பரிந்துரைத்துள்ளார். இவரின் இந்த முடிவுக்கு, பீஹாரில் நடந்த மேல்சபை தலைவர்களின் கூட்டத்தில், மற்ற மாநிலங்களின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதனால் காங்கிரஸ் அரசு, இவர் மீது கோபத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது மேல்சபை தலைவர் மாற்றம் குறித்து, அக்கட்சியினர் பேசி வந்தனர்.
இந்நிலையில், முதல் ஆண்டின் முதல் சட்டசபை, மேல்சபை கூட்டம் நாளை துவங்க உள்ளது. இதுதொடர்பாக, நேற்று விதான் சவுதாவில் பசவராஜ் ஹொரட்டி அளித்த பேட்டி:
இம்முறை கூட்டத்தொடரில், மாநிலத்தில் அதிகரித்து வரும் போதை பழக்கத்தைத் தடுப்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
சட்டசபை இணை ஆலோசனை கமிட்டி கூட்டம், 3ம் தேதி மாலை 3:00 மணிக்கு கூட்டும்படி சபாநாயகர் காதர், முதல்வர் சித்தராமையாவிடம் தெரிவித்துள்ளேன். இதில், பெங்களூரு நகர மேம்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று பா.ஜ., உறுப்பினர் விஸ்வநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், சிந்தனை குழுவை அமைக்கலாம் என்ற யோசனை எழுந்துள்ளது. நாம் நடத்தும் விவாதங்கள், சுமுகமான முடிவை எட்டுவதில்லை. கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க உள்ளேன்.
ராஜினாமா
சட்டசபை உறுப்பினர்களுக்கான சாய்வு நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய நிலை மேல்சபையில் ஏற்படவில்லை. உறுப்பினர்கள் இங்கு ஆர்வத்துடன் அமருகின்றனர். உணவு இடைவேளை முடிந்த பின்னரும் வந்துவிடுகின்றனர். ஏனெனில், சட்டசபை நிகழ்வு குறித்து நான் பேசுவது சரியல்ல.
அதிகாரம் என்பது நிரந்தரம் அல்ல. என்னை மாற்றுவது குறித்து ஆலோசிப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். என் பணியை நான் சரியாக செய்துள்ளேன்.
கர்நாடகாவில் காங்கிரசார் பெரும்பான்மை பெற்றுள்ளனர். அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. சாதாரண ஆசிரியராக இருந்து, இந்த பதவிக்கு வந்தேன். என்னை ராஜினாமா செய்ய வலியுறுத்தும் விதமாக காங்கிரஸ் நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வருவதற்காக நோட்டீஸ் கொடுத்தால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.