/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
தடைகளை தாண்டி கிரிக்கெட்டில் ஜொலிக்கும் பார்வையற்ற காவ்யா
/
தடைகளை தாண்டி கிரிக்கெட்டில் ஜொலிக்கும் பார்வையற்ற காவ்யா
தடைகளை தாண்டி கிரிக்கெட்டில் ஜொலிக்கும் பார்வையற்ற காவ்யா
தடைகளை தாண்டி கிரிக்கெட்டில் ஜொலிக்கும் பார்வையற்ற காவ்யா
ADDED : டிச 29, 2025 06:36 AM

பார்வையற்ற பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்த ஆண்டு முதல் முறையாக கடந்த மாதம் இலங்கையில் நடந்தது. இதில், இறுதி போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு தலைமை தாங்கியவர் கர்நாடகாவின் துமகூரை சேர்ந்த டி.சி.தீபிகா.
இதே அணியில் கர்நாடகாவின் மற்றொரு வீராங்கனை காவ்யாவும் இடம் பெற்றிருந்தார். கிரிக்கெட்டிற்காக காவ்யா கடந்து வந்த பாதை எளிதானதல்ல. தடைகளை தாண்டி ஜொலித்து உள்ளார்.
ஷிவமொக்கா மாவட்டம் ரிப்பன்பேட்டையை சேர்ந்த காவ்யா, பிறந்ததில் இருந்தே கண்பார்வை இல்லாதவர். நான்காம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளியில் படித்தார். 2009ம் ஆண்டிற்கு பின் அவரது குடும்ப சூழ்நிலை மோசமானது. இதனால், காவ்யாவுக்கு கல்வி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவரை ஷிவமொக்காவில் உள்ள பார்வையற்றோர் சிறப்பு பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் பரிந்துரை செய்தனர்.
ஆரம்பத்தில் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றாலும், பின், பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்தனர். ஷிவமொக்காவில் சிறிது நாட்கள் படித்த காவ்யா, பின், மத்திய பிரதேசம் போபாலுக்கு சென்று அங்குள்ள பள்ளியில் படித்தார்.
விளையாட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை காவ்யாவுக்கு இருந்ததால், பார்வையற்றோர் பள்ளியின் ஆசிரியர்கள், கிரிக்கெட் விளையாடும்படி காவ்யாவை ஊக்கப்படுத்தினர்.
பெங்களூரு சமர்த்தனம் அறக்கட்டளையில் பி.யு.சி., படித்த போது, காவ்யாவுக்கு கிரிக்கெட்டில் பல வாய்ப்புகள் வந்தன. ஆல் ரவுண்டராக பல போட்டிகளில் ஜொலித்தார். தற்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டே, ஞானபாரதி கல்வி சங்கத்தில், முதுகலை பட்டப்படிப்பு படிக்கிறார்.
''கிரிக்கெட் விளையாடுவதற்கு பல தடைகளை கடந்து வந்து உள்ளேன். இப்போது, இந்திய அணியில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
ஆசிரியர்கள் என்னை தொடர்ந்து ஊக்குவித்தனர். எனது பெற்றோர் கூலி வேலை செய்து தான், எங்களை காப்பாற்றினர்' என, காவ்யா பெருமையுடன் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

