/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பார்வையற்றோரை உதாசீனப்படுத்தும் நடத்தை பி.எம்.டி.சி., ஓட்டுநர், நடத்துநர்கள் அடாவடி
/
பார்வையற்றோரை உதாசீனப்படுத்தும் நடத்தை பி.எம்.டி.சி., ஓட்டுநர், நடத்துநர்கள் அடாவடி
பார்வையற்றோரை உதாசீனப்படுத்தும் நடத்தை பி.எம்.டி.சி., ஓட்டுநர், நடத்துநர்கள் அடாவடி
பார்வையற்றோரை உதாசீனப்படுத்தும் நடத்தை பி.எம்.டி.சி., ஓட்டுநர், நடத்துநர்கள் அடாவடி
ADDED : ஜூலை 24, 2025 11:21 PM

பெங்களூரு: பி.எம்.டி.சி.,யின் 'வாயு வஜ்ரா' பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய பார்வையற்றோருக்கு அனுமதியளித்து, நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டும், இதை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொருட்படுத்தவில்லை. பார்வையற்ற பயணியரிடம் அடாவடியாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
முழுமையாக பார்வையில்லாத பயணியருக்கு, பி.எம்.டி.சி., பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது 'வாயு வஜ்ரா' பஸ்களுக்கும் பொருந்தும் என, பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குநர் பிரபாகர் ரெட்டி, ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் இதை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பின்பற்றுவது இல்லை. வஜ்ரா பஸ்களில் பார்வையற்றோர் ஏறினால், அவர்களிடம் டிக்கெட்டுக்கான தொகையை வசூலிக்கின்றனர். டிக்கெட் வாங்க மறுத்தால், தயவு, தாட்சண்யமின்றி கீழே இறக்கி விடுகின்றனர்.
ஓட்டுநர், நடத்துநர்களால் பலர் பாதிக்கப்பட்டனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுரேஷ் கூறியதாவது:
எனக்கு முற்றிலுமாக பார்வை இல்லை. சில நாட்களுக்கு முன்பு ஹெப்பாலுக்கு செல்வதற்காக, டின் பேக்டரியில் வோல்வோ வஜ்ரா பஸ்சில் ஏறினேன்.
இலவசமாக பயணம் செய்ய அனுமதியளிக்கும் பாஸ் காட்டியும், நடத்துநர், 'இந்த பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய முடியாது. டிக்கெட் வாங்கு, இல்லையென்றால் கீழே இறங்கு' என்றார்.
பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டதை சுட்டிக்காட்டியும், அவர் கேட்கவில்லை. சுற்றறிக்கையை காட்டும்படி திமிராக பேசினார்.
என்னிடம் பாஸ் இருப்பதால், டிக்கெட் வாங்க மறுத்தேன். நடத்துநர், கஸ்துாரி நகர் நிறுத்தத்தில், என்னை இறக்கிவிட்டார். மற்றொரு வஜ்ரா பஸ் வந்தது.
அதில் ஏறினேன். அந்த பஸ்சின் நடத்துநரும், பாஸ் ஏற்க மறுத்து டிக்கெட் வாங்கும்படி கூறினார்.
இங்கும் சண்டை போட்டு இறங்க வேண்டாம் என, நினைத்து 30 ரூபாய் கொடுத்து, டிக்கெட் வாங்கினேன்.
காலையில் பணிக்கு செல்லும்போது, சாதாரண பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதால், அதில் பயணம் செய்கிறேன்.
ஆனால் மாலை நேரத்தில், சாதாரண பஸ்கள் கிடைப்பதில்லை. பத்து வோல்வோ பஸ்கள் வந்தால், ஒரு சாதாரண பஸ் வருகிறது. அந்த பஸ்சில் ஏறினால், அவதிப்பட வேண்டியுள்ளது.
பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குநரின் சுற்றறிக்கை குறித்து, ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சாதாரண பஸ்களில் பயணம் செய்யும்போது, எங்களை போன்ற பார்வையற்றோர், பல பிரச்னைகளை அனுபவிக்கிறோம்.
பஸ் எந்த இடத்தில் செல்கிறது என, கேட்டால் ஓட்டுநர்கள் பதில் சொல்வது இல்லை. பார்வையற்றோரிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ளும்படி, ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு மேலதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் வீரப்பா கூறியதாவது:
ஜூலை 6ம் தேதியன்று, மைசூரு வங்கியில் இருந்து மெஜஸ்டிக் செல்ல, பி.எம்.டி.சி., பஸ்சில் ஏறினேன்.மெஜஸ்டிக் வந்த பின், மற்ற பயணியர் இறங்கியதும் நான் இறங்க தாமதமானது.
இதை கண்டும் ஓட்டுநர் பஸ்சை நகர்த்தியதில், நான் கீழே விழுந்துவிட்டேன்.
என்னை போன்ற கண் தெரியாத பயணியர் இறங்கும் வரை, காத்திருக்கும் பொறுமை, ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் இருப்பது இல்லை. அன்று நானே தவறு செய்ததை போன்று பேசினர்.
நான் சஹாயவாணியை தொடர்பு கொண்ட பின், ஓட்டுநரும், நடத்துநரும் மன்னிப்பு கேட்டனர். கீழே விழுந்ததில் என் காலில் அடிபட்டு, நான்கு நாட்கள் வலியால் அவதிப்பட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.