/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்ப்பதற்காக பெங்களூரு சாலைகளில் வெடிகுண்டு சோதனை
/
அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்ப்பதற்காக பெங்களூரு சாலைகளில் வெடிகுண்டு சோதனை
அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்ப்பதற்காக பெங்களூரு சாலைகளில் வெடிகுண்டு சோதனை
அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்ப்பதற்காக பெங்களூரு சாலைகளில் வெடிகுண்டு சோதனை
ADDED : டிச 27, 2025 06:31 AM

பெங்களூரு: பெங்களூரில் ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, நேற்று நகரின் பிரதான சாலைகளில் வெடிகுண்டு சோதனை நடந்தது. டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக இந்த சோதனை நடத்தப்பட்டது. வரும் நாட்களிலும் வெடி குண்டு சோதனை நடத்தப்பட உள்ளது.
பெங்களூரின் எம்.ஜி.,ரோடு, சர்ச் ரோடு, கோரமங்களா, இந்திரா நகர், பிரிகேட் ரோடு போன்ற பகுதிகளில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமரிசையாக நடக்கும். இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்க, பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணியர் வருகை தருவர். இதனால், வீதிகளில் இளம் வயதினரின் கூட்டம் அதிகமாக காணப்படும். கடும் கூட்ட நெரிசலும் ஏற்படும்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பார்கள், பப்கள் போன்றவையும் தயாராகி வருகின்றன. அதேசமயம், போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரம் அடைந்துள்ளன. நேற்று முன்தினம் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், பைக்கிலேயே சக போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
ஏராளமான விதிமுறைகள் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, இரவில் பார்ட்டி நடத்துவோர் கட்டாயம் போலீசாரிடம் அனுமதி வாங்க வேண்டும்.
தீ தடுப்பு பாதுகாப்பு, அதிக கூட்டத்திற்கு தடை, கண்காணிப்பு கேமரா நிறுவுதல், அதிக எண்ணிக்கையில் பவுன்சர்களை பணியமர்த்தல் போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும். கட்டடங்களின் அடித்தளம், வாகன நிறுத்துமிடங்கள், மொட்டை மாடிகள் போன்றவற்றில் பார்ட்டிகள் நடத்த அனுமதியில்லை.
பட்டாசு, போதைப்பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, முக்கிய சாலைகளில் கூட்டக்கட்டுப்பாடு, குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, டில்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, புத்தாண்டு தினத்தன்று பெங்களூரில் மக்கள் அதிகம் கூட்டம் கூடும் நேரத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக, நேற்று வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் அதிரடி சோதனையில் இறங்கினர்.
சோதனை இந்த சோதனை சர்ச் சாலை, எம்.ஜி., ரோடு போன்ற பிரதான சாலைகளில் வெடிகுண்டு ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய மோப்ப நாய், வெடிகுண்டை கண்டுபிடிக்கும் கருவியுடன் சோதனை நடத்தினர். மேலும், அந்த சாலைகளில் உள்ள பப் பகுதிகளை சுற்றியும் சோதனை நடத்தப்பட்டது.
இதை பார்த்த அப்பகுதியினர் பதற்றம் அடைந்தனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், டில்லி வெடிகுண்டு சம்பவத்தால் இன்றும், நாளையும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட உள்ளது.
இதையடுத்து, நகரில் உள்ள பார், பப்களின் உரிமையாளர்களோடு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் சந்திப்பு நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:
ரேவ் பார்ட்டி, சட்டவிரோத பார்ட்டிகள் நடத்த அனுமதிக்க கூடாது. ஜாதி, மதம் குறித்த பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது. மேலாளர், ஊழியர்கள் மது அருந்தக்கூடாது.
அதிகாலை 1:00 மணிக்குள் அனைத்து பார்கள், பப்களையும் மூட வேண்டும். அதிக மக்களை அனுமதிக்கக்கூடாது.
அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

